உள்நாடு

குற்றவாளிகளை அரசு ஒருபோதும் பாதுகாக்காது

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய எவரையும் அரசு பாதுகாக்காது. உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் சாதகமான பெறுபேறுகள் கிடைக்கப்பெறும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் கடப்பாடாகும். எனவே, அந்த அறிக்கையிலுள்ள முக்கிய விடயங்கள் நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை உட்பட அனைத்து இணைப்புகளும் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. எம்மிடம் ஒளிப்பதற்கு ஒன்றும் இல்லை. எனினும், தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயங்கள் வெளிப்படுத்தப்படமாட்டாது.

இதன்படி எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பில் சிறந்த பெறுபேறு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கின்றோம். அதன் மூலம் நம்பிக்கை ஏற்படும். தாக்குதலுடன் தொடர்புடைய எவரையும் பாதுகாக்க மாட்டோம். எவருக்கும் வெள்ளையடிப்பு செய்யவேண்டிய தேவை எமக்கு இல்லை. உண்மை கண்டறியப்படும். உரிய சட்ட நடவடிக்கை இடம்பெறும்.அதேவேளை, ஷரியா சட்டம் தவறான அறிவிப்பு மட்டுமல்ல பயங்கரமானது. இந்நாட்டில் தனியார் சட்டங்கள் இருந்தாலும் அவை நாட்டின் பொதுசட்டத்துக்கு கட்டுப்பட்டவை. எனவே, நாட்டின் சட்டத்தை ஏற்கமுடியாது எனக் கூறுவது சட்டவிரோதமாகும். அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.. “ எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு சூரியகாந்தி எண்ணெய் நன்கொடை!

களனி கங்கையில் கைக்குண்டுகள் மீட்பு

கிராம அலுவலர்களுக்கான கொடுப்பனவில் மாற்றம்!