(UTV | லாஹூர்) – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் போது, பாகிஸ்தான் வர்த்தக மற்றும் வணிக மேம்பாட்டு ஆணையம், கொழும்பு பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து, “பாகிஸ்தான் – இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டை பெப்ரவரி 24, 2021 அன்று ஏற்பாடு செய்திருந்தது.
பாகிஸ்தான் பிரதமர் இலங்கையுடனான வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் பாகிஸ்தானில் இருந்து வருகை தந்த தங்க ஆபரணம், ஆடை, மருந்துகள், விவசாய பொருட்கள், உணவு, கட்டுமானப் பொருட்கள், கனிய வளங்கள்,வாகன உதிரிப்பாகங்கள், பாதணிகள், தகவல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா துறை சார்ந்த முக்கிய வணிக பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை தாங்கினார்.
இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இம்மாநாட்டில் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.வர்த்தக மற்றும் முதலீடு தொடர்பான பிரதமர் இம்ரான் கானின் ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத் மற்றும் இலங்கையின் வர்த்தக அமைச்சர் பண்துல குணவர்தன, இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களான மக்தூம் ஷா மஹ்மூத் குரேஷி மற்றும் தினேஷ் குணவர்தனவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். அமைச்சர்களான விமல் வீரவன்ஸ, பிரசன்ன ரனதுங்க, அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் தரகா பாலசூரியா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற ) முஹம்மது சாத் கட்டாக் அவரது வரவேற்புரையில், நிலையான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மூலம் இரு நாடுகளின் தொடர்ச்சியான சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான பாகிஸ்தான் மற்றும் இலங்கை அரசாங்கங்களின் திட்டத்தை சுட்டிக்காட்டினார். இரு நாடுகளின் நட்புறவானது பல தசாப்தங்களாக பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்றும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டு முயற்சிகளையும், வர்த்தக மற்றும் முதலீட்டு துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதன் மூலம் இவ்வுறவை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
பாகிஸ்தான் பிரதமர் உரையாற்றும் போது, வறுமை ஒழிப்பு மற்றும் நலன்புரி அரசை நிறுவுவதன் மூலம் பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கான தனது திட்டத்தையும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சந்தை இணைப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும், பாகிஸ்தானில் வணிகத்திற்கும் முதலீட்டிற்கும் உகந்த சூழலை உருவாக்குவதன் மூலம் இலாபத்தை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நெடுகே உள்ள துணைக் கண்ட நாடுகளிடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மூலம் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் சுற்றுலா துறையை, குறிப்பாக இலங்கை பெளத்த மக்களிடம் கெளரவத்திற்குரிய பெளத்த தளங்களின் மீதான சுற்றுலாத்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதில் இலங்கை வணிகத்துறை மற்றும் முதலீட்டாளர்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் மக்தூம் ஷா மஹ்மூத் குரேஷி தனது உரையில், அபிவிருத்தியை மையமாகக் கொண்டு இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதன் மூலம் சாத்தியமான “பூகோள-அரசியலில்” இருந்து “பூகோள பொருளாதாரத்திற்கான” மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். பாகிஸ்தானிய மற்றும் இலங்கை வர்த்தக சமூகத்தினர், பாரம்பரிய மற்றும் நவீன துறைகளில் , குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறை ஆகியவற்றில் இணைந்து செயற்படுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் எட்டப்படாது இருக்கும் பாரிய வர்த்தக வாய்ப்புக்களை அனுபவிக்க இலவச வர்த்தக ஒப்பந்தத்தில் சேவைகள் மற்றும் முதலீட்டு வர்த்தகம் உள்ளடக்கப்பட வேண்டும் என வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான பிரதமரின் ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத் குறிப்பிட்டார்.
பொருளாதார ஸ்திரத்தன்மை, வெளிநாட்டு உள் முதலீட்டில் பாரிய அபிவிருத்தி, தொழில் வாய்ப்புக்களில் விரைவான அதிகரிப்பு ஆகியவற்றினால் பாகிஸ்தான் அண்மையில் அனுபவித்த பொருளாதார வளர்ச்சியை ஆலோசகர் சுட்டிக்காட்டியதோடு இந்த அரிய வாய்ப்புகளைப் பயன்படுத்த இலங்கை வர்த்தக சமூகத்தினருக்கு பாகிஸ்தானுடனான வர்த்தகத்திற்கு அழைப்பு விடுத்தார்.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை வர்த்தக நிறுவனங்கள் சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை (சிபிஇசி) திட்டத்தில் உள்ள அறிய வாய்ப்புகளை பயன்படுத்தி மத்திய ஆசிய சந்தைகளையும் அதற்கு அப்பாலும் உள்ள வர்த்தக ரீதியான அடைவுகளை இருநாடுகளும் அடைவதன் முக்கியத்துவத்தையும் அவர் விளக்கினார்.
தகவல் மற்றும் வணிக வாய்ப்புகளைப் பரிமாறிக் கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதிநிதிகள் மற்றும் 150 க்கும் மேற்பட்ட இலங்கை வர்த்தக சமூகத்தினர் ஒன்றிணைத்த பொது அமர்வுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது.
மேலும், இம் மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு மேம்பாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்த பாகிஸ்தானின் முதலீட்டு வாரியம் மற்றும் இலங்கை முதலீட்டு வாரியம் (BOI) இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாட்டு பிரதமர் முன்னிலையில் கைசாத்திடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், பாகிஸ்தான் சி.சி.எல் பார்மாசூட்டிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் , இலங்கை ஹெமஸ் பார்மாசூட்டிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் லிமிடெட், மற்றும் பாகிஸ்தான் மெனிக்ஸ் ஜெனிக்ஸ் பார்மா பிரைவேட் லிமிடெட் , எமர்செமி என்.பி. (சிலோன்) லிமிடெட் இடையே முறையே , உற்பத்தி, விநியோகம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்ற ஒத்துழைப்பு ஆகியற்றில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
இம் மாநாட்டில், பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த பிரமுகர்கள், முக்கிய வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க செயற்பாட்டாளர்கள், கொழும்பில் உள்ள இராஜதந்திர உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.