வணிகம்

நீண்ட கால வரலாறு கொண்ட சீனா-பாகிஸ்தான் நட்புறவு

(UTV | கொழும்பு) – சீன மக்கள் குடியரசு மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு ஆகிய இரு நாடுகளுக்கிடையில் 21, மே 1951 அன்று இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகின. அன்றிலிருந்து , ஏழு தசாப்தங்களாக இரு நாடுகளும் வலுவான இராஜதந்திர உறவை பேணிவருகின்றன. இந்த நட்பு இருநாடுகளுக்கும் இடையில் உள்ள ஒரு பெறுமதிமிக்க சொத்தாக மாறியுள்ளதுடன் , இருநாட்டு மக்களும் இவ்வுறவை மிகவும் நேசிக்கின்றனர்.

சீனா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையான நட்புக்கு ஒரு நீண்ட கால வரலாறு உண்டு. மறைந்த சீனப் பிரதமர் ஜாவ் என்லாய் கூறியது போல், “சீனர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் இடையிலான நட்பானது தொன்றுதொட்டு காணப்படுகின்றது. 2,000 ஆண்டுகளுக்கு முன்னர், சீனாவும் பாகிஸ்தானும் ஏற்கனவே பண்டைய பட்டுப்பாதையினால் இணைக்கப்பட்டிருந்தன. இருநாட்டு மக்களும் ஒருவருக்கொருவர் விஜயம் செய்துள்ளனர். அதன்பிறகு, தொடர்ந்து வரலாறு நெடுகிலும் இந்நட்பானது மீண்டும் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.”

சீனா-பாகிஸ்தான் நட்பானது ஒரு வலுவான அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்டி எழுப்பப்பட்டுள்ளது. இரு நாடுகளும் தத்தமது முக்கிய நலன்கள் மற்றும் அக்கறைகளில் ஒன்றோடு ஒன்றாக நின்று ஆதரவளிக்கின்றன. இக்கட்டான காலங்களின்கூட, உதாரணமாக, புதிய சீனா வெளிப்புற முற்றுகைகளை உடைத்து இராஜதந்திர உறவை ஆரம்பிக்க முயன்றபோதும், தேசிய கெளரவத்தை பாதுகாக்க பாகிஸ்தான் நெருக்கடிகளுக்கு மத்தியில் எழுந்து நின்றபோதும், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தது மட்டுமல்லாமல் உண்மையான நண்பர்களாகவும் செயற்பட்டனர்.

சீனா-பாகிஸ்தான் நட்பானது இரு நாட்டு மக்களின் உள்ளங்களிலே ஆழமாக வேரூன்றி உள்ளது. இக்கட்டான காலங்களில், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் முடிந்தவரை எந்தவித எதிர்பார்ப்புகளும், உள்நோக்கங்களும் இல்லாமல் உண்மையாக ஆதரவு அளித்துள்ளனர். 2008 ஆம் ஆண்டில் சீனாவின் வென்சுவானில் பெரும் பூகம்பம் ஏற்பட்டபோது, பாகிஸ்தான் தன்னிடம் கையிருப்பில் இருந்த கூடாரங்கள் அனைத்தையும் வழங்கி உதவியது. 2010 ல் பாகிஸ்தான் வெள்ள அனர்த்தத்திற்கு முகம் கொடுத்த போது, சீனா தனது வரலாற்றில் மிகப்பெரிய மனிதாபிமான நடவடிக்கையை பாகிஸ்தானுக்கு வழங்கி உதவி செய்தது. இது போன்ற சம்பவங்கள் ஏராளம் உள்ளன. மேலும், சீனா-பாகிஸ்தான் நட்புறவை மேலும் மேன்படுத்திடுவது இரு நாடுகளளினதும் ஒருமித்த நோக்கமுமாகும்.

நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, சீனா-பாகிஸ்தான் உறவானது மேலும் வலுவடைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டில், ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க விஜயமமென்றை பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட போது இரு நாடுகளின் தலைவர்களும் இரு நாட்டு உறவை மூலோபாய கூட்டு அடிப்படையில் மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டனர். இது இரு நாட்டுத் தொடர்புகளில் புதிய பாதை ஒன்றை ஏற்படுத்தியது.

இரு நாடுகளுக்கிடையில் உயர் மட்ட பரிமாற்றங்கள், நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளின் இருதரப்பு வருகைகள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் பலதரப்பு நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. இருதரப்பு ஒத்துழைப்பு , முக்கிய மூலோபாய பிரச்சினைகள் குறித்த கருத்து பரிமாற்றமும் இருநாடுகளுக்கிடையில் நடைபெறுகின்றன. மேலும், இருநாடுகளின் வளர்ச்சிக்கு மூலோபாய வழிகாட்டுதல்களையும் இருநாடுகளும் பரிமாறிக்கொள்கின்றன.

சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப்பாதையை (CPEC) மையமாகக் கொண்டு குவாடர் துறைமுகம், போக்குவரத்து உள்கட்டமைப்பு, எரிசக்தி மற்றும் தொழில்துறை ஒத்துழைப்புக்கு முன்னுரிமை அளிக்கும் “1 + 4” ஒத்துழைப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. CPEC இன் கீழ், 70 ஆரம்ப அறுவடை திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 46 திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. மொத்தம் 25.4 பில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டு, பாகிஸ்தானில் 70,000 வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதன. பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியின் ஒரு திட்டமான சிபிஇசி (CPEC) ஆனது, சீனாவும் பிற இஸ்லாமிய நாடுகளும் தங்கள் அபிவிருத்தித்திட்டங்களை ஒருங்கிணைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது.

இரு நாட்டு மக்கள் தொடர்புகள் மென்மேலும் வளர்ந்து வருகிறது. கலாச்சார மாதங்கள், திரைப்பட வாரங்கள், சுற்றுலா ஆண்டுகள் மற்றும் தேசிய விளம்பர நடவடிக்கைகள் ஆகியவை நடத்தப்படுகிறது. ஊடகங்கள், கல்வி, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பும் ஆதரவும் முன்னேறி வருகின்றன. 2015 ஆம் ஆண்டில் சீனா-பாகிஸ்தான் நட்புறவு வருடத்தில், தொடர்ச்சியான கலாச்சார பரிமாற்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இது இரு நாட்டு உறவை மென்மேலும் வலுப்படுத்துகிறது. சமீபத்திய ஆண்டுகளில், மிகவும் பிரபலமான 100 உறுப்பினர்களைக் கொண்ட இளைஞர் குழுக்கள் ஒரு நீண்ட நட்புறவுக்கான நோக்கத்தின் அடிப்படையில் இருநாடுகளும் வரவழைத்தன.மேலும் அதிகமான பாகிஸ்தான் மாணவர்கள் சீனாவில் உயர்கல்வியை தொடர சீனா உதவியளிக்கிறது. வளர்ந்து வரும் சீனா-பாகிஸ்தான் நட்புறவானது, இருநாடுகளினதும் இருதரப்பு உறவின் அடிப்படையாகும்.

பலதரப்பு சந்தர்ப்பங்களில் இரு நாடுகளினதும் ஒத்துழைப்பு நெருக்கமாக உள்ளது. ஐ.நா. சாசனத்தின் நோக்கங்களையும் கொள்கைகளையும் இரு நாடுகளும் உற்றுநோக்குகின்றன. ஒருதலைப்பட்சம், பாதுகாப்புவாதத்தின் மீதான தடையற்ற வர்த்தகம் மற்றும் மேலாதிக்கத்தை வெல்வது போன்றவற்றில் பலதரப்பு வாதத்தை ஆதரிப்பதற்கான பொதுவான விழுமியங்கள் இவ்விரு நாடுகளிடமும் உள்ளன. தற்போதுள்ள சர்வதேச ஒழுங்கையும் ஐ.நா.வை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்பையும் நிலைநிறுத்த இவ்விரு நாடுகளும் கடமைப்பட்டுள்ளன. ஆலோசனைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் சர்வதேச மோதல்களை அமைதியான முறையில் தீர்க்க முடியுமென சீனா மற்றும் பாகிஸ்தான் உறுதியாக நம்புகின்றன. சீனாவும் பாகிஸ்தானும் ஐ.நா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, ஆசியா-ஐரோப்பா மாநாடு , ஆசியான் பிராந்திய மன்றம் மற்றும் பிற பிராந்திய, சர்வதேச மன்றங்களில் ஒன்றிணைந்து செயற்படுகின்றன. மேலும், இவ்விரு நாடுகளும், பிராந்தியத்தின் முக்கிய சர்ச்சசைக்குரிய விடயங்களுக்கு தீர்வு வழங்குவதற்கும், சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் முக்கிய பங்களிப்புகளைச் செய்கின்றன. அத்தோடு, பிராந்திய மட்டுமல்லாது சர்வதேச அமைத்திக்காகவும் இரு நாடுகளும் தமது பங்களிப்பை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

கோவிட் -19 அனர்த்தத்தின் போதும் இரு நாடுகளின் நட்புறவு வலுவாக வெளிப்பட்டது. சீனா கொரோனா வைரஸ் பரவலுக்கு முகம் கொடுத்த போது, பாகிஸ்தான் தன்னால் முடிந்த உதவிகளை சீனாவுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது. அனைத்து சமூக மட்டங்களையும் சேர்ந்த பாகிஸ்தானியர்கள் சீனாவின் கோவிட் 19 பரவலை கட்டுப்படுத்த தமது பூரண ஆதரவை வழங்கினர். ஒரு சில நாடுகள் இவ்வைரஸை அரசியலாக்குவதற்கும் சீனாவுக்கு களங்கம் விளைவிப்பதற்கும் முயன்ற போது பாகிஸ்தானியர்கள் அதை எதிர்த்து குரல் எழுப்பினர். அதே போன்று, பாகிஸ்தானில் கோவிட் -19 பரவல் அதிகரித்தபோது, சீன அரசு, இராணுவம், வணிக நிறுவனங்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் அனைத்தும் உதவ முன்வந்தன.சீன அரசு தொடர்ச்சியாக மருத்துவப் பொருட்களை வழங்கி உதவியது. மேலும், மருத்துவ நிபுணர் குழுக்களை அனுப்பி அனுபவப் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களை வலுப்படுத்தியது. இவ்வனர்த்தங்களின் போது இரு நாடுகளும் கூட்டாக செயல்பட்டன. அனைத்து சிபிஇசி (CPEC) நடவடிக்கைகளும் தடையின்றி தொடரப்படுவதில் இரு நாடுகளும் உறுதியாக இருந்தன. வேலை வாய்ப்புக்கள் குறைக்கப்படவுமில்லை. ஊழியர்கள் தத்தமது நாடுகளுக்கு திருப்பு அனுப்பப்படவுமில்லை. இது கோவிட் -19 அனர்த்தத்தின் போது நாடுகள் மேற்கொண்ட சிறந்த திட்டமிடளுக்கான ஓர் எடுத்துக்காட்டாகும்.

இவ்வருடம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வது ஆண்டு நிறைவு வருடமாகும். நவீனமயமாக்கப்பட்ட சோசலிச நாட்டை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் சீனா, இரண்டாவது நூற்றாண்டின் இலக்கை நோக்கி இப்போது பயணிக்கப்போகிறது. பாகிஸ்தான், பிரதமர் இம்ரான் கானின் “புதிய பாகிஸ்தான் ” திட்டத்தை யதார்த்தமாக மாற்ற பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி மட்டத்தினை மிக வேகமாக முன்னேற்றுகிறது. மேலும், இதற்கு, சீனா தனது ஒட்டுமொத்த ஒத்துழைப்பை பாகிஸ்தானுக்கு வழங்கி வருகிறது. தன்னம்பிக்கை திறனை உயர்த்தல், அரசியல் ஒற்றுமை, தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை மேம்படுத்துதல், சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்களில் ஆக்கபூர்வமான பங்கை வகித்தல் போன்றவற்றின் மூலம் பாகிஸ்தானின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் சீனா தொடர்ந்து உறுதுணையாக இருக்கிறது.

வரலாறு காணாத மாற்றங்கள் நிலவும் இன்றைய உலகில், சீனா-பாகிஸ்தான் ஒத்துழைப்பானது தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகும். எவ்வாறான சவால்கள் வந்தபோதும், அனைத்துத்துறைகளிலும் இருநாடுகளும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், நட்புறவை உறுதிப்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் இன்னும் நெருக்கமான சமூக உறவை உருவாக்குவதற்கும் சீனா தொடர்ந்து பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படும்.

இவ்வருடம், சீனா- பாகிஸ்தான் இராஜதந்திர உறவுகளின் 70 வது ஆண்டு விழாவை முன்னிட்டு பாரியவளிலான விழாக்கள் மற்றும் நிகழ்வுகள் இடம்பெற உள்ளன. உயர்மட்ட வருகைகள், வர்த்தக பரிமாற்றங்கள் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் ஆகியவை இந்நிகழ்வில் அடங்கும்.

எதிர்காலத்தில், இரு நாட்டு அனைத்து தரப்பினரும் , குறிப்பாக இளைய தலைமுறையினர், இரு நாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்த தமது நட்புறவை கட்டியெழுப்புவதில் ஆர்வம் காட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன். இரு நாடுகளினதும் கூட்டு முயற்சிகள், சீனா-பாகிஸ்தான் நட்புறவுக்கு எதிர்காலத்தில் இன்னும் பலம் சேர்க்கும் என்று நான் நம்புகிறேன்.

எழுத்தாளர் : திரு. வாங் யி (மாநில கவுன்சிலர் மற்றும் சீன மக்கள் குடியரசின் வெளியுறவு அமைச்சர்) 

Related posts

ஏற்றுமதி துறையின் பின்னடவை சீர் செய்யுமாறு அறிவுறுத்தல்

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு – பால்மா விலை குறைப்பு

மக்கள் வங்கி கிளைகள் திறந்திருக்கும் நேரம் அறிவிப்பு