(UTV | கொழும்பு) – எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் அவசர நிலைமைகளுக்கு சுகாதார தரப்பினர் அடங்கிய குழுவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையில் கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது,
நாடு முழுவதும் உள்ள 4,513 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
நிலவும் கொரோனா பரவல் காரணமாக அவசர நிலை ஏற்பட்டால் சிகிச்சை வழங்குவதற்காகவும் அந்தந்த பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளுடன் இணைப்பை ஏற்படுத்துவதற்காகவும் நோயாளர் காவு வண்டி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வைத்தியசாலைகளினது அறைகளின் வசதிகள் உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை விரைவுப்படுத்தவும் இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறியப்படுத்தவும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர பரீட்சை மையங்களில் உள்ள வசதிகளை ஏற்பாடு செய்வதற்கும் அங்கு கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் உள்ளூர் சுகாதார அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.