உள்நாடு

கொவிட-19 தடுப்பூசி : முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லை

(UTV | கொழும்பு) –  கொவிட-19 தடுப்பூசியை நட்பு நாடுகளுக்கு வழங்கும் இந்திய திட்டத்தில் முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்திற்கு எதுவும் முடியாது என்பது இதன்போது நிரூபணமாகியுள்ளதுடன் நீதிமன்ற உத்தரவுகளில் நாட்டை ஆள்வதற்கு முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் குழு கூட்டம் நேற்று(21) இடம்பெற்ற போதே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,

“.. அயலகத்திற்கு முதலிடம் என்ற கொள்கையில் இந்தியா செயற்பட்டாலும் கொவிட்-19 தடுப்பூசியை நட்பு நாடுகளுக்கு வழங்கும் திட்டத்தில் முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லாமை கவலையளிக்கிறது. இதற்கு அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையே காரணமாகும்.

இந்திய தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக அயல் மற்றும் முக்கிய நட்பு நாடுகளிலிருந்து பிரதமர் மோடியின் அரசுக்கு பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் தடுப்பூசிகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத் திறனைப் பயன்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டுக்கு அமைவாகவும், கொவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராட அனைவருக்கும் உதவும் வகையிலுமே இந்த திட்டம் அமைகிறது.

இதன் முதற் கட்டமாக பூட்டான், மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம், மியன்மார் மற்றும் சிஷெல்ஸ் ஆகிய நாடுகளிற்கான தடுப்பூசி விநியோகப் பணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளுக்கான விநியோகப் பணிகளை ஆரம்பிக்க முன்னர்nஅந்நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கு தேவையான அனுமதிகளை குறித்த நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும். இதுவே இந்தியாவின் நிலைப்பாடாகும். ஆனால் இலங்கை வெறுமனே வாய்மூலமாக வீராப்பு பேசுகிறது.

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்திற்கு எதுவும் முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது. இதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல எதிர்க்கட்சி முயற்சிக்கையில் அதற்கு எதிராக அடக்குமுறைகளை பிரயோகிப்பது மாத்திரமன்றி நீதிமன்ற உத்தரவுகளில் நாட்டை ஆள்வதற்கு முயற்சிக்கின்றனர்.

போலித்தனமான பிரசாரங்களினால் மக்களை முழு அளவில் ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை பிடித்துள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு நாடு மற்றும் மக்களின் நலன்கள் குறித்து அக்கறை இல்லை…” எனவும் தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

ரணிலுக்கு தொடர்ந்தும் எதிர்ப்பு

திஹாரி அல்-அஸ்ஹர் தேசிய கல்லூரியில் முயற்சியான்மை கழகம் ஸ்தாபிப்பு!