(UTV | கொழும்பு) – எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதி முதல் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று(20) கல்வியமைச்சில் இடம்பெற்றது. இதன்போது பெப்ரவரி மாதம் 15ம் திகதி பாடசாலைகளை திறப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைகளுக்கமைய குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக எதிர்வரும் 25ம் திகதி முதல் மேல் மாகாணத்திலுள்ள 907 பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.