(UTV | ஜெனீவா) – சமமற்ற கொரோனா தடுப்பூசி கொள்கைகளால், உலகம் தார்மீக ரீதியாக பெரிய தோல்வியை சந்திக்கவிருக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது.
ஏழ்மையான நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கக் கூடியவர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதற்கு முன், பணக்கார நாடுகளில் நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தடுப்பூசி கிடைப்பது நியாயமல்ல என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் கூறினார்.
இதுவரை பணக்கார நாடுகளில் 3.9 கோடி டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது, ஆனால் ஒரு ஏழை நாட்டில் வெறும் 25 டோஸ் தடுப்பூசிதான் வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விடயத்தில், உலக சுகாதார அமைப்பு மற்றும் சீனா என இருவர் மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
முன்னதாக, உலக சுகாதார அமைப்பால் ஒரு சுயாதீனக் குழு நியமிக்கப்பட்டது. ஐநா சபையின் பொது சுகாதார அமைப்பு சர்வதேச அளவில் அவசர நிலையை முன் கூட்டியே அறிவித்திருக்கலாம் என அக்குழு கூறியது. அத்தோடு கொரோனா தொடர்பாக சீனா விரைவாக போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளது.
இதுவரை, இந்தியா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களுக்கென தனியாக கொரோனா தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்துக் கொண்டன. மற்ற நாடுகள், ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.