(UTV | கொழும்பு) –
தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி – 2021 ஜனவரி 14
உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் தை மாதத்தில் கொண்டாடும் தைத்திருநாள் மத, கலாசார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியமான மகிமை பொருந்திய நாளாகும். தமிழர்களினால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தலைசிறந்ததாகவும் உயர்வானதாகவும் தைப்பொங்கல் பண்டிகை போற்றப்படுகின்றது. தமது உழைப்புக்கு உதவிய இயற்கைக்கு நன்றியுணர்வினை தெரிவிக்கும் திருநாளாக தைப்பொங்கல் விளங்குகின்றது.
இந்த தைப்பொங்கல் திருநாளில் உழவர்கள் தமது வேளான்மைக்கு உதவி செய்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர். இதற்காக அவர்கள் சூரியன் உதிக்கும் வேளையில் அவனுக்காக பொங்கலிட்டு தமது நன்றியை வெளிக்காட்டுக்கின்றனர். உழவர்கள் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு மனிதப்பிறவியும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இன்றைய நாள் போற்றப்படுகிறது.
இயற்கையின் பெறுமதி சமத்துவத்திற்கு மதிப்பளிக்க வேண்டியதன் முக்கியத்துவம்., நன்றி தெரிவிக்கும் உயரிய பண்பு போன்ற அனைத்து மதங்களினதும் மனித நேயக்கருத்துக்களை தைப்பொங்கல் பண்டிகை எமக்கு எடுத்தியம்புகின்றது.
இலங்கையர்களாகிய நாம் அனைவரும் இனம், மதம், மொழி ஆகியவற்றினால் வேறு பட்டிருந்தாலும் கூட எங்கள் அனைவரினதும் எண்ணங்களும் எதிர்பார்ப்புக்களும் ஒன்றாகும். நாட்டைக் கட்டியெழுப்பும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற உன்னத இலட்சியத்துடன் இலங்கை மக்களது வாழ்க்கையை முன்னேற்றிச் செல்லும் இத்தருணத்தில் இலங்கை மற்றும் உலகெங்குமுள்ள தமிழா்கள் உவகையுடன் கொண்டாடும் இப்பொங்கல் திருநாளானது மகிழ்ச்சிகரமாக, நன்றி செலுத்துகின்ற, மற்றும் மீளமைப்பிற்கான மக்கள் திருநாளாக அமைந்து, தமிழ் மக்களும், ஏனைய சமூகத்தவா்ககளும் ஒன்றுபட்டு எதிர்கால இலங்கையின் சமாதானத்திற்காக உறுதிபூணும் ஒர் தேசிய நல்லிணக்க தினமாக அமைகின்றது.
மக்கள் அனைவரதும் எதிர்கால வாழ்வில் சகல எதிர்பார்ப்புகளும் நிறைவேறி சாந்தியும், சமாதானத்துடனும், சௌபாக்கியத்துடனும் வாழ எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றேன். இந்த மகிழ்ச்சியான நன்நாளில் தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடிடும் சகோதர தமிழ் மக்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்
பிரதமர்
பிரதமர் ஊடக பிரிவு