(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் பரவலால் உயிரிழக்கக் கூடாது என நாம் முயற்சித்துக் கொண்டுள்ளோம், ஆனால் எதிர்க்கட்சியினர் ஒருவர் இறந்தால் அவரைப் புதைப்பதா அல்லது எரிப்பதா என விவாதித்துக் கொண்டுள்ளனர் என அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று(08), நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் பலவீனமான செயற்பாடுகள் குறித்தும் எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்;
“.. நாம் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை எடுத்தாக வேண்டும். நாட்டின் சட்டத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இருந்தோம். ஆனால் இந்த விடயத்தில் தமது மத சம்பிரதாயங்களுக்கு அமைய எரிப்பது இறை விருப்பத்துக்கு முரணானது, குர்ஆனில் குறிப்பிடப்படுவது புதைப்பது மட்டுமே என முஸ்லிம் அரசியல்வாதிகள் உறுதியான நிலைப்பாட்டில் இருந்து கருத்துக்களை கூறுகின்றனர்.
நான் இது குறித்து அறிந்துகொள்ள குர்ஆனை ஆரம்பம் தொடக்கம் முடிவு வரை இரண்டு தடவைகள் வாசித்தேன். இதில் ஐந்தாவது அத்தியாயத்தில் நல்லதொரு விடயம் குறிப்பிடப்படுகின்றது, ஆதமின் புதல்வர்கள் இருவருக்கு இடையில் இடம்பெறும் மோதலில் ஒரு மகன் இறக்கின்றார். குர்ஆனுக்கு அமைய உலகின் முதலாவது மரணம் இதுவாகும், எனவே, இந்த உடலை என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. இதில் 31 ஆம் அத்தியாயத்தில் கூறப்படுகிறது என்னவென்றால், இறைவன் பறவை ஒன்றை அனுப்புகின்றான், அந்த பறவை நிலத்தை கொத்தி குழி தோண்டுகிறது, ஏனென்றால் இந்த உடலை மண்ணினால் புதைக்க வேண்டும் என்பதற்காக என கூறப்படுகிறது. இந்த இடத்தில் தான் உடல் நல்லடக்கம் குறித்து சுட்டிக்காட்டப்படுகிறது.
ஆனால் குர்ஆனை நான் படித்துப் பார்த்ததில் கவனித்த ஒன்று என்னவென்றால், கண்டிப்பாக உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்றோ அல்லது உடலை எரிப்பது மார்க்கத்துக்கு முரணானது என்றோ குர்ஆனில் எங்கேயும் சுட்டிக்காட்டப்படவில்லை. முஸ்லிம்களின் ஏனைய நடவடிக்கைகளில் நன்மை தீமைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் உடலை அடக்கம் செய்வது விடயத்தில் அவ்வாறு எதுவுமே செய்யப்படவில்லை.
எனவே மத வழிபாடுகள் சம்பிரதாயங்கள் என்று எடுத்துக்கொண்டால் அனைத்து மதங்களிலும் அவ்வாறான சம்பிரதாயங்கள் உள்ளன, சத்தமிடும் முஸ்லிம் அரசியல்வாதிகள் எனக்கு உடல் எரிப்பு ஹராம் என நிரூபியுங்கள். அது இன்றி ஆனால் அவை அனைத்தையும் ஓரமாக வைத்துவிட்டு சுகாதார வழிமுறைகளுக்கு கட்டுப்பட்டாக வேண்டும்..” எனத் தெரிவித்திருந்தார்.