விளையாட்டு

பிசிசிஐ தலைவர் கங்குலியின் உடல்நிலையில் முன்னேற்றம்

(UTV | இந்தியா) –   பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் உடல்நிலை சீராக இருக்கிறது. சிகி்ச்சைக்கு அவரின் உடல் நன்கு ஒத்துழைக்கிறது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை உடற்பயிற்சியில் கங்குலி ஈடுபட்டு இருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் கங்குலி சேர்க்கப்பட்டுள்ளார்.மருத்துவமனையில் கங்குலிக்கு பிரதான ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பிசிசிஐ தலைவர் கங்குலி விரைவாக குணமடைய வேண்டும் என பிரார்த்தி்க்கிறேன். அவரின் குடும்பத்தாருடன் பேசினேன். தாதா உடல்நிலை சீராக இருக்கிறது. சிகிச்சைக்கு அவரின் உடல்நிலை நன்கு ஒத்துழைக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும்(ஐசிசி) சவுரவ் கங்குலி விரைவாக குணமடைய வாழ்த்துத் தெரிவித்துள்ளது. ஐசிசி ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், “ இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு இன்று காலை லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. அவர் விரைவாக குணமடைய ஐசிசி வாழ்த்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஹர்பஜன் சிங், முன்னாள் கேப்டன் சேவாக், முகமது கைப் ஆகியோர் கங்குலி விரைவாக குணமடைய வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

விராட் கோலி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ விரைவாக நீங்கள் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். கங்குலி விரைவாக மீண்டுவாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

சேவாக் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ தாதாஜி விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முகமது கைப் ட்விட்ரில் “ விரைவாக குணமடைவீர்கள் தாதா. உங்களுக்கு ஏற்பட்ட மாரடைப்பு குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.இப்போது நன்றாக இருப்பீர்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

குசல் பெரேராவின் அறுவை சிகிச்சை தாமதம் குறித்து சனத் கேள்வி

மீண்டும் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் தொடரும் திருமணமும் பதானின் பார்வையில் ஒன்றே