கேளிக்கை

அரசியலில் ரஜினி

(UTV | இந்தியா) -எதிர்மறை கதாபாத்திரமாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்த ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் உச்சத்தைத் தொட்டு தமிழக அரியணையை குறிவைத்து பயணத்தை துவங்கியிருக்கிறார். தமிழ்த் திரையுலகில் உச்சபட்சமான இடத்தைப் பிடிக்க அவர் மேற்கொண்ட பயணம் கடினமானது. ஆனால், தமிழக அரசியல் பாதை அதைவிடக் கடினமானதாக இருக்கும்.

1975ல் கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் ‘அபஸ்வரம்’ என்ற அறிமுகத்தோடு, லேசான தாடி, கலைந்த தலையுடன் கதவைத் திறந்தபடி நுழையும் ரஜினிகாந்த், அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாவார் என்று யாரும் கணித்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், தனது சிகரெட்டிற்காக தீக்குச்சியை எவ்வளவு ஸ்டைலாக, துரிதமாக பற்றவைப்பாரோ, அதே ஸ்டைலுடனும் வேகத்துடனும் தமிழ் சினிமாவின் உச்சத்தை அடைந்தார் ரஜினிகாந்த். ஒரு கட்டத்தில் ஆசியாவில் அதிக ஊதியம் பெறும் நடிகர்களில் ஒருவராகவும் உயர்ந்தார். மாநில எல்லைகளை மட்டுமல்லாமல், சில சமயங்களில் தேச எல்லைகளையும் கடந்து ரசிக்கப்பட்டார் ரஜினி.

1980களிலும் 90களிலும் திரையுலகில் மந்திரச் சொல்லாக உச்சரிக்கப்பட்ட ரஜினியின் உச்சத்தை நோக்கிய பயணம் அசாத்தியமானது.

பெங்களூரின் ஒரு புறநகர்ப் பகுதி. ரானோஜி ராவ் – ராம் பாய் தம்பதியின் குடும்பம் மிகச் சாதாரணமான ஒரு நடுத்தர மராத்தியக் குடும்பம். இத்தம்பதிக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருக்க, 1949 டிசம்பர் 12ஆம் தேதி இரவில் நான்காவதாகப் பிறந்தது அந்தக் குழந்தை. கறுப்பாக, ஒல்லியாக இருந்த அந்தக் குழந்தைக்கு சிவாஜி ராவ் கெய்க்வாட் எனப் பெயரிடப்பட்டது.

பெங்களூர் கவிபுரத்திலிருக்கும் பள்ளிக்கூடம், பசவன்குடி ப்ரீமியர் மாதிரி பள்ளிக்கூடம் என பி.யூ.சி. வரை படித்த ரஜினிகாந்திற்கு, சிறுவயதிலிருந்தே சினிமா மீது தீவிர காதல் உண்டு. ஒரு கட்டத்தில் தேர்வுக்கு வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்தவர், சிறிய சிறிய வேலைகளைப் பார்த்தார். ஆனால், எதுவும் சரிவராமல் போகவே, பெங்களூர் திரும்பிய ரஜினிகாந்த், கர்நாடக போக்குவரத்துக் கழகத்தின் நடத்துனர் பணியில் சேர்ந்தார்.

அந்தத் தருணத்திலேயே மிகவும் ஸ்டைலாக வலம்வந்த ரஜினி, நண்பர்களுடன் சேர்ந்து நாடகங்களிலும் நடித்துவந்தார். பிறகு ஒரு கட்டத்தில் ஃபிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் படிப்பதற்காக மீண்டும் சென்னைக்கு வண்டியேறினார் ரஜினி. 1973-1974ல் அந்த இன்ஸ்ட்டிடியூட்டில் ரஜினி படித்துக்கொண்டிருந்தபோது, விருந்தினராக உரையாற்றிய கே. பாலச்சந்தருடன் அறிமுகம் கிடைத்தது.

ஆனால், அந்த அறிமுகம் உடனடியாக சினிமா வாய்ப்பாக மாறவில்லை. தட்டுத்தடுமாறி தமிழ் பேசிய ரஜினிகாந்த்தை, நன்றாக தமிழ் கற்றுக்கொள்ளும்படி சொல்லிவிட்டுப் போனார் பாலச்சந்தர். வேறு சினிமா வாய்ப்புகளும் இல்லாத நிலையில், மீண்டும் நடத்துனர் வேலைக்கே செல்லலாம் என்று பெங்களூர் திரும்பினார் ரஜினி. ஆனால், அதற்குள் அந்த நடத்துனர் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் மனிதர்.

நொந்துபோய் மீண்டும் சென்னைக்குத் திரும்பிய ரஜினிகாந்திற்கு காலம் வேறு ஒரு கட்டளையை வைத்திருந்தது. சென்னைக்கு வந்து சில மாதங்களில் பாலச்சந்தரிடமிருந்து அழைப்பு வந்தது. ஒரு சிறிய பாத்திரத்திற்கு நடிகரைத் தேடிக்கொண்டிருந்த பாலச்சந்தர், அந்தப் பாத்திரத்திற்கு ரஜினியைத் தேர்வுசெய்தார்.

சிவாஜி ராவ் கெய்க்வாட், ரஜினிகாந்தாக பெயர்சூட்டப்பட்டார். அபூர்வ ராகங்களில் ஒரு துருப்பிடித்த கதவைத் திறந்த ரஜினி, தமிழக மக்களின் மனங்களில் நுழைந்தார். அடுத்ததாக, மூன்று முடிச்சு, அவர்கள் என தனது அடுத்தடுத்த படங்களிலும் வாய்ப்பளித்தார் பாலச்சந்தர்.

தமிழ் சினிமாவில் நம்பியார் வில்லனாக வந்து எம்.ஜி.ஆருடன் சண்டை போட்டபோது, அவரை சபித்த தமிழ் ரசிகர்கள், சிகரெட்டை தூக்கிப்போட்டபடி வில்லத்தனம் செய்த ரஜினியை ரசிக்க ஆரம்பித்தார்கள். விறுவிறுவென வெற்றிப்படிகளில் ஏற ஆரம்பித்தார் ரஜினி.

1975ல் அறிமுகமான ரஜினி, 1978க்குள் 40 படங்களில் நடித்து முடித்திருந்தார். ஒரு கட்டத்தில் மூன்று ஷிஃப்ட்களில் நடித்த ரஜினி, மன அழுத்தத்திற்கு ஆளானார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெறுமளவுக்கு நிலைமை மோசமானது. ஆனால், மீண்டுவந்த ரஜினி தர்மயுத்தம் படத்தின் மூலம், வெற்றிக்கணக்கை விட்ட இடத்திலிருந்து துவங்கினார்.

இதற்குப் பிறகு மெல்ல மெல்ல நெகடிவ் பாத்திரங்களில் இருந்து விலகி, தனக்கென தனித்துவம் மிக்க மிகை நாயக பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார் ரஜினி. ஒன்றிரண்டு காட்சிகளிலாவது நகைச்சுவையும் இருப்பது கட்டாயமாகிப்போனது.

ரஜினியின் படங்களுக்கு கிடைத்த தொடர் வெற்றிகள், தமிழ் சினிமாவில் அவரை ஒரு சட்டகத்திற்குள் கட்டிப்போட்டன. வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள என்ன வேண்டுமோ, அதைச் செய்யும் ஒரு நடிகராக உருவெடுக்க ஆரம்பித்தார் ரஜினி. அதைப் பற்றி அவர் பெரிதாகக் கவலையும்படவில்லை. ரசிகர்களுக்கு விரும்பியதைத் தந்துவிட்டுப்போவதே அவரது பாணியாக இருந்தது.

1970களின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவில் மாற்றத்தின் காற்று வீசிக்கொண்டிருந்தது. இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர் – சிவாஜியின் காலம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. காலியாக இருந்த அந்த இரு துருவ போட்டியில், சரியாகப் பொருந்தினார்கள் ரஜினியும் கமலும். அப்போதிலிருந்து 1990களின் பிற்பகுதிவரை இந்த ஜோடியின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் நீடித்தது.

தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் தனது முத்திரையைப் பதித்தார் ரஜினி. பதினாறு வயதினிலே படத்தில் இரண்டாயிரம் ரூபாயை சம்பளமாக வாங்கிய ரஜினி, 1990களின் பிற்பகுதியில், இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்தார்.

ரஜினியின் சினிமா வாழ்வின் ஆரம்பகட்டத்தில், அவரைப் பற்றிய எதிர்மறையான செய்திகள் அவ்வப்போது நாளிதழ்களில் வந்துகொண்டிருந்தன. அந்தச் செய்திகளை ரஜினிகாந்த் பெரிதாக பொருட்படுத்தியதில்லை. ஆனால், 80களின் பிற்பகுதியில் தனக்கு ஆன்மீக நம்பிக்கை இருப்பதை வெளிப்படையாகக் காண்பிக்க ஆரம்பித்தார் ரஜினி.

ஸ்ரீ ராகவேந்திரர் என்ற 16 – 17ஆம் நூற்றாண்டு மகான் மீதான பக்தியால், அவரது வாழ்கைக் கதையை படமாக எடுத்து, அதில் அவரது பாத்திரத்திலேயே நடித்தார் ரஜினி. இதற்குப் பிறகு, ஆன்மீகத்தையும் துறவறத்தையும் விரும்பக்கூடிய ஒரு மனிதர் என்ற பிம்பம் ரஜினிக்கு ஒட்டிக்கொண்டது. வள்ளி போன்ற திரைப்படங்கள் இதை உறுதிப்படுத்தவும் செய்தன.

இந்த காலகட்டத்தில்தான் மெல்ல மெல்ல அரசியலின் நிழல் அவர் மீது விழ ஆரம்பித்தது. அண்ணாமலை, முத்து படங்களில் அவர் பேசிய வசனங்களுக்கு, பல்வேறு அரசியல் அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டன. பாட்ஷா பட விழாவில் அவர் பேசிய பேச்சும் 1996 தேர்தலின்போது அவர் கொடுத்த வாய்சும் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தன.

ஆனால், அதற்குப் பிறகு 2017ஆம் ஆண்டுவரை ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த யூகங்கள், யூகங்களாகவே தொடர்ந்தன. 2017ல் தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த பிறகும், உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் தவிர்த்துவந்தார் ரஜினி. அவரது இந்தத் தவிப்பும், தவிர்ப்பும் புதிதானவை அல்ல.

1996வாக்கில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு கடுமையான அதிருப்தியை சம்பாதித்திருந்த நிலையில், ரஜினியை முன்னிறுத்தி காங்கிரஸ் தனியாக தேர்தலைச் சந்திக்க விரும்பியதாகவும் ஆனால், ரஜினி இறுதி நேரத்தில் இந்த முயற்சியிலிருந்து விலகிவிட்டதாகவும் செய்திகள் உண்டு. 1996ல் ரஜினி அரசியலில் நேரடியாக இறங்காதது குறித்த வருத்தம் இப்போதும் அவரது ரசிகர்களிடம் உண்டு.

1975ல் ஒரு சிறிய பாத்திரத்தில் அறிமுகமாகி, வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு பாத்திரங்களில் நடித்து, உச்சத்தை நோக்கி பயணம் செய்த நடிகர் ரஜினிகாந்திற்கு, எந்த பாத்திரம் குறித்தும் தயக்கங்கள் இல்லை. எவ்வளவு சின்ன பாத்திரமாக இருந்தாலும் அதில் அவர் தனது முத்திரையைப் பதிக்கத் தயங்கியதில்லை.

ஆனால், அரசியல் என்று வரும்போது தயக்கம் என்பதுதான் அவரது முத்திரையாகவே இருந்து வருகிறது. அரசியலில் அவர் தற்போது எதிர்கொள்ளும் முக்கியமான கேள்வி, இரண்டு பெரிய திராவிடக் கட்சிகள் கோலோச்சும் தமிழ்நாட்டில், தன்னுடைய அரசியல் என்னவாக இருக்க வேண்டும் என்பதுதான். இதற்குப் பதிலாக, ‘ஊழலற்ற ஆன்மீக அரசியல்’ என்ற கருத்தை முன்வைக்கிறார் ரஜினி. ஊழல் குற்றச்சாட்டுகளால் சூழப்பட்ட, மதத்தையோ கடவுளையோ மையமாகக் கொள்ளாத திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அவர் இந்த வியூகத்தை முன்னெடுத்திருக்கலாம்.

தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சியும் கிட்டத்தட்ட இதே களத்தில்தான் நிற்கும் நிலையில், ரஜினியின் அரசியல் எப்படி வேறுபட்டு நிற்கும் என்பதை அவர் விளக்க வேண்டியிருக்கும்.

திரையுலக வாழ்வின் துவக்கத்தில் எதிர்மறை நாயகனாகவும் பிறகு angry young man ஆகவும் இருந்த ரஜினி, தன் திரைவாழ்வின் உச்சத்தில் இருந்தபோது வெளிவந்த படங்களில் நிலபிரபுத்துவ காலத்து மதிப்பீடுகளை அவ்வப்போது பிரதிபலித்தார். பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறுத்தார். 1990களில் ஜெயலலிதா மீதான ரஜினியின் எதிர்ப்பை, இந்த பின்னணியில் இருந்து பலரும் புரிந்துகொள்ள முயன்றார்கள்.

.கடந்த காலங்களில் அரசியல் குறித்து ரஜினி வெளிப்படுத்திய சமிக்ஞைகள், ஒன்றுக்கொன்று முரணானவை. அவற்றை வைத்துக்கொண்டு ரஜினி குறித்து யாரும் எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. ஆனால், 2017ல் ரஜினி தனது அரசியல் அபிலாஷையை வெளிப்படுத்திய பிறகு, “மக்கள் அரசுக்கு அடங்கியவர்களாக, போராட்டங்கள் செய்யாதவர்களாக இருக்க வேண்டும்” என்று கருதக்கூடிய ஒரு தலைவராக உருவெடுக்க அவர் விரும்புகிறாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

இடஒதுக்கீட்டிற்கான போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் எனத் துவங்கி, ஜல்லிக்கட்டிற்கான போராட்டம் வரை தமிழகத்தின் அரசியல் வரலாற்றை போராட்டங்களே வழிநடத்தியிருக்கின்றன. மதமோ, ஆன்மீகமோ வாக்கு அரசியலின் மையப் புள்ளியாக இங்கு இருந்ததில்லை.

ஆனால், ரஜினிகாந்த் இவற்றுக்குத் தொடர்பில்லாத ஒரு அரசியலை முன்வைக்கிறார். அந்தக் களத்தில் வெற்றிபெற, தன்னுடைய அரசியலுக்கான வலுவான காரணங்களை மக்களிடம் முன்வைக்க வேண்டியிருக்கும். தன்னை நிரூபிக்க 2021ஆம் ஆண்டு தேர்தல் என்ற ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே அவருக்குத் தரப்படும்.

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர். – சிவாஜி என்ற இரு துருவங்களின் காலம் முடிவுக்கு வந்தபோது, ரஜினியை எம்.ஜி.ஆராகவும் கமலை சிவாஜியாகவும் ஒப்பிட்டு மகிழ்ந்தார்கள் ரசிகர்கள். ஆனால், அந்த ஓப்பீடு சினிமாவோடு முடிந்துவிடுகிறது. அரசியலில் அவர் எம்.ஜி.ஆரா, சிவாஜியா என்பதை முடிவுசெய்ய வெகுகாலம் ஆகப்போவதில்லை.

Related posts

நயன்தாரா பட ரீமேக்கில் தமன்னா?

பிரபல நடிகர் மாரடைப்பால் காலமானார்

ஹாரிபாட்டர் நடிகர் திடீர் மரணம்