(UTV | அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமது தோல்வியை ஏற்க தயங்குவது வெட்கக்கேடான விடயமென ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகள் அவரது அதிகாரத்திற்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றதை ஏற்க விரும்பாத குடியரசு கட்சியினருடன் இணைந்து எவ்வாறு செயற்பட முடியுமென ஊடகவியலாளர்களால் ஜோ பைடனிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
எவ்வாறாயினும், குடியரசு கட்சியினர் தன்னை ஜனாதிபதியாக ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் பதில் வழங்கியுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் தமது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறியுள்ள ஜோ பைடன், ரஷ்ய மற்றும் பிரேஸில் ஜனாதிபதிகள் இருவரும் தமக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க சட்ட மா அதிபர் அனுமதியளித்துள்ளார்.
கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளதுடன் தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.