(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை காலம் முடிவடைந்துள்ளதால் அவர் மீண்டும் கிரிக்கெட் தொடர்பிலான செயற்பாடுகளில் ஈடுபட முடியும் என என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
இந்த விடயத்தை உறுதிபடுத்தும் வகையில் சனத் ஜயசூரிய நேற்று(03) அறிக்கையொன்றை விடுத்திருந்தார்.
தமக்கு விதிக்கப்பட்டிருந்த தடை காலம் முடிவடைந்துள்ளதை சர்வதேச கிரிக்கெட் பேரவையும் அதன் ஊழல் ஒழிப்புப்பிரிவும் அறிவித்துள்ளதாக சனத் ஜயசூரியவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்புபடுவதற்கான வாய்ப்பு கிடைத்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டின்போது தாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நேர்மையாக செயற்பட்டதாகவும் சனத் ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
தாம் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதை இலங்கையில் கிரிக்கெட்டை நேசிக்கும் அனைவரும் அறிவதாக அவரது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடினமான சந்தர்ப்பங்களில் தமக்கு சக்தியாக அமைந்த கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் இலங்கை மக்களுக்கு நன்றி கூறுவதாகவும் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.