உள்நாடு

மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு அந்தமான் கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் (12N – 18N, 80E – 93E) இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் பலத்த அல்லது மிகக் கடுமையான காற்று, பலத்த மழைவீழ்ச்சி, கொந்தளிப்பான அல்லது மிகவும் கொந்தளிப்பான கடல் போன்ற நிலைமைகள் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும், காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என மீனவர்கள் அறிவுறுத்தப்படுவதோடு, கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

Related posts

ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது மனித உரிமை மீறல் இடம்பெற்று இருக்கிறதா? இல்லையா? [VIDEO]

பொதுமக்களே மின் துண்டிக்கப்பட்டால் முறைப்பாடு செய்யுங்கள் – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

குழந்தை காப்பாற்றிய பின் உயிர்விட்ட வைத்தியர் பாஹிமா!