உலகம்

நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை மேலும் இரு நாடுகள் உறுதி செய்தது

(UTV | ஜெர்மன்) – அலெக்சி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை பிரான்ஸ், சுவீடன் நாடுகள் உறுதி செய்ததாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.

ரஷ்யா ஜனாதிபதி புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி.

இவர் சமீபத்தில் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது மயங்கி விழுந்தார். உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் கோமா நிலைக்கு சென்றார். அலெக்சியை கொலை செய்ய அவர் குடித்த தேநீரில் விஷம் கலந்திருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், ரஷ்யாவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டால் புதின் அரசால் அவரது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று ஜெர்மனி அழைத்துச் செல்லப்பட்டு தலைநகர் பெர்லினில் உள்ள வைத்தியசாலையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே இராணுவ ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், நோவிசோக் எனப்படும், மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கும் நச்சுப்பொருளை பயன்படுத்தி, அலெக்சியை கொலை செய்ய முயற்சித்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜெர்மனி அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தது.

ஆனால் ஜெர்மனியின் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்தது. எனினும் அலெக்சிக்கு விஷம் வைக்கப்பட்டது குறித்து வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென ரஷ்யாவை ஜெர்மனி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், ஜெர்மனி அரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் சைபர்ட் இதுபற்றி கூறுகையில் “அலெக்சியின் உடலில் நோவிசோக் நச்சுப்பொருள் கலந்ததை, ஜெர்மனியை தொடர்ந்து பிரான்ஸ், சுவீடன் ஆகிய நாடுகளின் ஆய்வகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. இதுபற்றி ரஷ்யா முறையான விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து எங்களது ஐரோப்பியா நட்பு நாடுகளுடன் நெருக்கமான ஆலோசனையில் இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

வுஹான் ஆய்­வு­கூ­டத்­தி­லி­ருந்து கொவிட்19 கசிந்­தது என்­பதை நிரா­க­ரிப்­ப­தற்­காக சி ஐ ஏ இலஞ்சம்!

புத்தாண்டையொட்டி பட்டாசு – வாண வேடிக்கைகளுக்கு தடை

பாகிஸ்தானில் பாரிய குண்டு வெடிப்பு – 50 பேர் பலி.