(UTV | கொழும்பு) – புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குமாறு, வியத்மக அமைப்பின் நிபுணர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் முதல் முறையாக வியத்மக அமைப்பின் நிபுணர்களை, நேற்று மாலை எதுல்கோட்டையில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் சந்தித்திருந்தார்.
இதன்போது, பல்துறைசார் நிபுணர்களின் பங்களிப்புடன், 2016ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட வியத்மக அமைப்பின் மூலம், மக்களின் ஆழமான சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அரசியல்வாதிகள் தலையிடவேண்டிய இடங்களை அடையாளம் கண்டு, அதனுடன் தொடர்புபடாத வகையில் நாட்டின் எதிர்கால பயணத்துக்காக கொள்கைகளை வகுக்க வேண்டிய பொறுப்பு வியத்மக அமைப்பின் முன்னால் காணப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.