உலகம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன் மோதும் ஹேக்கர்கள்

(UTV | அமெரிக்கா) – எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் குழுக்களை ரஷ்யா, சீனா மற்றும் ஈரானுடன் தொடர்புகளை கொண்ட ஹேக்கர்கள் இரகசியமாக நோட்டமிட்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது.

2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனநாயக கட்சியின் பிரசாரத்தை குறிவைத்து சீர்குலைத்த அதே ரஷ்ய ஹேக்கர்கள் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

தேர்தலை இலக்காகக் கொண்டு “வெளிநாட்டு குழுக்கள் தங்கள் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளன என்பது தெளிவாகிறது” என அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜோ பைடன் ஆகிய இருவரின் பிரசாரங்களும் ஹேக்கர்களின் கண்காணிப்பின் கீழ் உள்ளன.

ஸ்ட்ரோண்டியம் என்ற குழுவை சேர்ந்த ரஷ்ய ஹேக்கர்கள் இதுவரை 200க்கும் மேற்பட்ட அமைப்புகளை குறிவைத்துள்ளதாகவும், அவற்றில் பல அமெரிக்க அரசியல் கட்சிகளான குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியினருடன் தொடர்புடையவை என்றும் மைக்ரோசாஃப்ட் தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இதே ஹேக்கர்கள்தான் பிரிட்டனை சேர்ந்த அரசியல் கட்சிகள் மீதும் தாக்குதல் நடத்தியதாக அந்த நிறுவனம் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது,

ரஷ்ய இராணுவ புலனாய்வுத் துறையான ஜி.ஆர்.யு உடன் இணைந்ததாகக் கூறப்படும் சைபர் தாக்குதல் பிரிவான ஃபேன்ஸி பியர்தான் ஸ்ட்ரோண்டியம் என்றும் அழைக்கப்படுகிறது.

“நாம் கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலின்போது சந்தித்ததை போன்றே தற்போது மீண்டும் மக்களின் இணைய கணக்குகளின் உள்நுழைவு விவரங்களை திருடுவதற்கோ அல்லது கணக்குகளை ஹேக் செய்வதற்கோ ஸ்ட்ரோண்டியம் குழுவை சேர்ந்த ஹேக்கர்கள் முயற்சிக்க தொடங்கியுள்ளனர். இது உளவு தகவல்களை திரட்டவோ அல்லது தேர்தலை சீர்குலைக்கவோ உதவும் என்ற எண்ணத்துடன் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது” என்று மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

Related posts

டெல்டாவை எதிர்க்கும் ஜான்சன் & ஜான்சன்

பூட்டானில் முதல் முறையாக முழுமையான ஊரடங்கு

பில் கேட்ஸை வீழ்த்திய ஈலான் மஸ்க்