(UTV | இந்தியா) – இந்திய அணியின் தலைசிறந்த சகலதுறை ஆட்டக்காரராக திகழ்ந்த யுவராஜ் சிங், ஓய்வு முடிவை மீளப் பெற இருப்பதை உறுதி செய்துள்ளார்.
2007-ம் ஆண்டு இந்திய அணி இருபதுக்கு-20 உலகக் கிண்ணத்தினையும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கிண்ணத்தினையும் இந்தியா கைப்பற்ற முக்கிய நபராக திகழ்ந்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததன் பின்னர் 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.
இவர் சமீபத்தில் பஞ்சாப் அணி இளம் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பஞ்சாப் மாநில அணிக்காக விளையாட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்கு மீண்டும் திரும்பும் வகையில் ஓய்வு முடிவை மீளப் பெற்றுள்ளார்.
இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில்;
‘‘நான் இளைஞர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டேன். விளையாட்டு குறித்து பல்வேறு அம்சங்கள் பேசினோம். அவர்களிடம் நான் பேசும்போது பல்வேறு விசயங்களை அவர்கள் கேட்டுக்கொண்டார்கள் என உணர்கிறேன்.
நான் இரண்டு மாதங்களாக பயிற்சி மேற்கொண்டேன். ஆஃப்-சீசன் முகாமில் பேட்டிங் மேற்கொண்டேன். பயிற்சி ஆட்டத்தில் போதுமான அளவிற்கு ரன்கள் அடித்தேன். பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் புனீத் பாலி என்னை அணுகி, ஓய்வு முடிவை மீளப் பெறுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
தொடக்கத்தில் அவரது கோரிக்கையை நான் ஏற்க விரும்புகிறேன் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது. உள்ளூர் கிரிக்கெட் தொடரை நான் முடித்துவிட்டேன். பிசிசிஐ அனுமதி கொடுத்தால், உலகளவில் பிரான்சிஸ் அளவிலான லீக்குகளில் விளையாட விரும்புகிறேன்.
ஆனால் என்னால் பாலியின் வேண்டுகோளையும் நிராகரிக்க முடியாது. கடந்த மூன்று அல்லது நான்கு வாரங்களாக ஏராளமான நினைப்புகள் வந்தன. ஆனாலும், எது குறித்தும் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
பஞ்சாப் அணி சாம்பியன்ஷிப் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. நான், ஹர்பஜன் சிங் தொடர்களை வென்றுள்ளோம். ஆனால் நாங்கள் இணைந்து பஞ்சாப்பிற்கு எதுவும் செய்யவில்லை. ஆகவே, இது என்னுடைய இறுதி முடிவில் முக்கிய காரணியாக இருக்கும்’’ என்றார்.