உலகம்

கொரோனாவால் வறுமையில் வாடும் பெண்கள் விகிதம் உயரும்

(UTV | அமெரிக்கா)- உலகளவில் பெருந்தொற்றாக மாறியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் வறுமையில் வாடும் பெண்களின் விகிதம் உயரும் என ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.

“கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து பாலின சமத்துவம்” என்ற தலைப்பில், ஐ.நா பெண்கள் மற்றும் வளர்ச்சி திட்டம் சார்பில் ஐ.நா. சபையில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கொரோனா வைரஸால் தெற்காசியாவில் (இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பூடான், மாலைத்தீவு, நேபாளம், இலங்கை) பாலின வறுமை இடைவெளி இன்னும் மோசம் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தெற்காசியாவில் வறுமையில் வாடும் பெண்கள் விகிதம் உயரும் எனவும் 25-34 வயதுக்குட்பட்ட ஆண்களை விட அதிகமான பெண்கள் அடுத்த 10 ஆண்டுகளில் ஏழ்மை நிலையில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய், 2021-க்குள் 4 கோடியே 70 இலட்சம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை கடும் வறுமையில் தள்ளிவிடும்.

உலகிலேயே கடுமையான ஏழ்மை நிலையில் உள்ளவர்களில் 87 சதவீதம் பேர் வசிக்கிற மத்திய மற்றும் தெற்காசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் வறுமை மேலும் அதிகரிக்கும். அதாவது மத்திய மற்றும் தெற்காசியாவில் மேலும் 5 கோடியே 40 லட்சம் பேரும், ஆப்பிரிக்காவில் 2 கோடியே 40 லட்சம் பேரும் சர்வதேச வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் நிலையை கொரோனா ஏற்படுத்தி விடும்.

தெற்காசியாவில் வறுமை பெருக காரணம், பெருந்தொற்று நோயால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி ஆகும்.

கொரோனா காலத்துக்கு முன்பாக 2021-ம் ஆண்டில் தெற்காசியாவில் வறுமையில் வாடும் பெண்கள் விகிதம் 10 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டது. இப்போது கொரோனாவுக்கு பின்னே இந்த விகிதம், 13 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 ஆண்டில் உலகளவில் 100 ஆண்களுக்கு 118 பெண்கள் என்ற அளவில் ஏழைகள் இருப்பார்கள் எனவும் 2030-ல் இது 100 ஆண்களுக்கு 121 பெண்கள் என்ற அளவுக்கு மேலும் உயரும். 25-34 வயதினரில், 100 ஆண்களுக்கு 118 பெண்கள் என்ற விகிதாசாரம் தெற்காசியாவில் இருக்கும். இதுவே 2030-ல் 100 ஆண்களுக்கு 129 பெண்கள் என்ற அளவுக்கு அதிகரிக்கும்.

உலகளவில் பெண்கள் வறுமை விகிதம் 2019-2021 இடைவெளி 2.7 சதவீதம் குறையும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கொரோனாவால் இடைவெளி 9.1 சதவீதமாக அதிகரிக்கும். இந்த பெருந்தொற்று நோய், அடுத்த ஆண்டுக்குள் 9 கோடியே 60 லட்சம் பேரை கூடுதலாக கடும் வறுமையில் தள்ளும். அவர்களில் 4 கோடியே 70 லட்சம் பேர் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் ஆவர் என இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சிரியாவில் முதலாவது கொரோனா மரணம்

இந்தியாவில் ஒரே நாளில் 90,000 ஐ தாண்டிய தொற்றாளர்கள்

லாஹூரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியா அதன் தொடர்ப்பை மறுப்பது ஏற்கமுடியாது