கிசு கிசு

சிக்கித் தவிக்கும் விக்கி

(UTV | கொழும்பு) – விடுதலைப்புலிகள் (LTTE) அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் சார்ந்த சமூகத்திற்கு அநீதி இழைத்ததால் தான், அவர்கள் ஆயுதம் ஏந்தி போராட தூண்டப்பட்டதாகவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல, அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள். இலங்கை பண்டைய காலம் முதல் தமிழ் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்துவதற்கு தன்னிடம் சாட்சியங்கள் இருக்கின்றன.

மேலும், விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்ல, ஆயுதம் ஏந்துவதற்கு இலங்கையின் ஆட்சியாளர்களே காரணம். இதற்கு விடுதலைப்புலிகளை குறை சொல்வதில் பயனில்லை. அதேவேளை அரசாங்கம் தான் செய்யும் தவறுகளை மூடி மறைத்து, அது குறித்து கேள்வி எழுப்புகின்றவர்களை தீவிரவாதிகளாக சர்வதேசத்தின் மத்தியில் சித்தரிக்கின்றது.

மேலும் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள், பொதுமக்களை கொலை செய்ய வேண்டிய அவசியம் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு இருக்கவில்லை. இராணுவமே அவர்களை கொலை செய்தது.

நீதி கேட்டு போராடும் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமை உள்ளதாகவும் அதனாலேயே தாம் முள்ளிவாய்க்காலுக்கு சென்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டேன்..” எனவும் குறித்த நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்யவேண்டும் என ‘நவ சிங்கள ராவய’ அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் வலியுறுத்தி இருந்தார்.

இது தொடர்பில் ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த தேரர்;

“.. அரசியல் இலாபத்திற்காக இனவாதத்தை தூண்டும் நடவடிக்கையில் விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். அவரின் இந்த முயற்சியை தோற்கடிப்பதற்கு அனைத்து மக்களும் ஓரணியில் திரளவேண்டும்.

அதுமட்டுமல்ல விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்து, வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும். பாராளுமன்றத்துக்குள் மட்டுமல்ல வெளியிலும் அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுகின்றார்.

புலிகளின் பிரிவினைவாத முகாமையே அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவரின் அறிவிப்புகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்..” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

டிரம்பின் தலைக்கு 80 மில்லியன் டொலர்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி விலகுவதற்கான சரியான தருணம் இதுவே…

பால்மா தாட்டுப்பாடும் டோக்கன் முறைமையும்