(UTV | மலேசியா) – இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நீண்ட கால குடிநுழைவு அனுமதி அட்டை வைத்திருப்போருக்கு மலேசியாவுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய குடிநுழைவுக் கட்டுப்பாடு இம்மாதம் 7ஆம் திகதியில் இருந்து நடப்புக்கு வரும் என மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் யாக்கோப் தெரிவித்திருந்தார்.
கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் வெளிநாடுகளிலிருந்து மலேசியாவுக்குள் வருவதை இந்நடவடிக்கை தடுக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
புதிய கட்டுப்பாட்டின் கீழ் இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மலேசிய நிரந்தரவாசிகள், ‘மலேசியா என் இரண்டாவது வீடு’ எனும் திட்டத்தில் இணைந்திருப்பவர்கள், மலேசியாவில் வேலை செய்யும் நிபுணர்கள், மலேசியரைக் கணவன் அல்லது மனைவியாகக் கொண்டிருப்பவர் ஆகியோர் மலேசியாவுக்குச் செல்ல முடியாது.
குறிப்பிட்ட சில நாடுகளில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்திருப்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மற்ற நாடுகளில் கொரோனா ஏற்படுத்தும் பாதிப்பை மலேசிய அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணிக்கும் எனவும் அமைச்சர் இஸ்மாயில் தெரிவித்திருந்தார்.
மற்ற நாடுகளிலும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்தால் அவற்றுக்கும் அதே கட்டுப்பாட்டுகள் விதிக்கப்படக்கூடும் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.