(UTV | கொழும்பு) – நாட்டில் கொவிட் 19 (கொரோனா) தொற்று அச்சம் காரணமாக நாட்டில் பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கையில், அனைத்து பள்ளிகளும் (மசூதிகளும்) முன்பு போலவே முழு நேரமும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகளில் அமைந்துள்ள தண்ணீர் குழாய்கள் மற்றும் கழிப்பறைகளை வழிபாட்டாளர்களின் பாவனைக்காக திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் தண்ணீர் தொட்டிகளை தொடர்ந்தும் மூடி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார அதிகாரியின் வழிகாட்டுதல்கள் மற்றும் வழிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் அனுமதிக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் உள்ளூர் பொது சுகாதார பரிசோதகர்களின் முழு மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.