(UTV | இந்தோனேசியா) – இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுகள் பகுதியில் இன்று அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சுமாத்ராவின் தெற்கு பகுதியில் உள்ள பெங்குலு நகரில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 5.23 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.8 ஆக பதிவாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த 6-வது நிமிடத்தில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.9 ஆகவும் பதிவாகி இருந்தது. அடுத்தடுத்த இந்த இரு நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இருப்பினும் இரு நிலநடுக்கங்களால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 22 கி.மீ ஆழத்திலும் 2-வது நிலநடுக்கம் 26 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்டது.
கடந்த 2004-ம் ஆண்டு சுமாத்ரா தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மிகப் பெரிய சுனாமி பேரழிவு ஏற்பட்டது. ரிக்டரில் 9.1 அலகுகள் பதிவான இந்த நிலநடுக்கத்தால் இந்தியா உட்பட இந்த பிராந்தியத்தில் மொத்தம் 220,000 பேர் பலியாகினர். இந்தோனேசியாவில் மட்டும் 170,000 பேர் உயரிழந்தனர்.
இதன் பின்னர் 2018-ல் சுலவேசி தீவுகளில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.5 ஆக பதிவானது. அப்போது சுனாமி பேரலைகள் எழுந்து மொத்தம் 4,300 பேரை பலி கொண்டமையும் நினைவுகூறத்தக்கது.