(UTV|கொழும்பு) – போக்குவரத்துத் துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
போக்குவரத்து அமைச்சு மற்றும் பல உயரதிகாரிகளுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, முதல் கட்டமாக பயணிகளுக்கு சிறந்த மனநிலையில் பேரூந்து அல்லது ரயில்களில் பயணம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலை ஏற்படுத்தி போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் பணியை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், இலங்கை போக்குவரத்து சபையை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
பேருந்துகளை சுத்தம் செய்து பிரயாணிகளுக்கு பயணிப்பதற்கான ஒழுங்குகளை இன்றைய தினமே ஆரம்பியுங்கள் என ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.
பஸ்களுக்கிடையிலான ஒருங்கிணைந்த கால அட்டவணை மற்றும் பஸ் மற்றும் ரயில்கள் ஆகியவற்றுக்கிடையிலான ஒருங்கிணைந்த கால அட்டவணை ஆகியவற்றை தயாரிக்கும் நடவடிக்கைகளை விரைவாக ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இதன் அடிப்படையில், கொழும்பு கோட்டை உள்ளிட்ட நான்கு ரயில் நிலையங்களை நவீனமயப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்
இதேவேளை, சிறந்த முறையிலுள்ள சாதாரண பேருந்துகளை அதிவேக வீதி போக்குவரத்தில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும், ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது