(UTV | கொழும்பு) – செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்ற 150,000 பேரை தொழிலில் அமர்த்தும் நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தகுதிவாய்ந்த பட்டதாரிகளை அவர்களின் பாடத்திட்டங்களுடன் தொடர்புபட்ட துறைகளில் தொழிலுக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.
குறைந்த வருமானம் உடையவர்களுக்கான ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களை தெரிவுசெய்யும்போது, அனைத்து கிராம சேவை பிரிவுகளிலும் இருந்து வறுமை நிலையில் அதி கூடியவர்களை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்
அரச சேவையிலுள்ள பலவீனங்களையும் குறைபாடுகளையும் நிவர்த்திக்கும் வகையில் தொழிற்பயிற்சி அளிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில், புதிய நியமனங்களை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.