உலகம்

ஈரானின் 4 சரக்கு கப்பல்கள் அமெரிக்காவினால் பறிமுதல்

(UTV | ஈரான்) – ஈரானில் இருந்து சுமார் 11 லட்சம் பேரலில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு வெனிசுலாவுக்கு புறப்பட்ட லூனா, பாண்டி, பெரிங், பெல்லா என்ற 4 சரக்கு கப்பல்களையும் பறிமுதல் செய்ததாக அமெரிக்கா தற்போது தெரிவித்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.

குறிப்பாக ஈரானின் முதன்மை தொழிலான கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இதேபோல் எண்ணெய் வளமிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலா மீதும் அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்து இருக்கிறது.

இந்நிலையில் பொருளாதார தடைகளை மீறி ஈரான் வெனிசுலாவுக்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்வதாகவும் எனவே வெனிசுலாவுக்கு பெட்ரோல் கொண்டு செல்லும் ஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கக் கோரி அமெரிக்க கோர்ட்டில் கடந்த மாதம் வழக்கு தொடரப்பட்டது.

எனினும் சர்வதேச கடலில் அமெரிக்க கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்துவது சாத்தியமில்லை என பொருளாதார தடை நிபுணர்கள் கருதினர்.

இதனிடையே, ஈரானில் இருந்து சுமார் 11 லட்சம் பேரலில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு வெனிசுலாவுக்கு புறப்பட்ட லூனா, பாண்டி, பெரிங், பெல்லா என்ற 4 சரக்கு கப்பல்களும் திடீரென மாயமாகின.

இந்த கப்பல்களின் நிலை குறித்து இதுவரை தெரியாமல் இருந்து வந்த நிலையில், ஈரானின் 4 சரக்கு கப்பல்களையும் பறிமுதல் செய்ததாக அமெரிக்கா தற்போது தெரிவித்துள்ளது.

Related posts

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் 36,000 ஊழியர்கள் பணி இடைநீக்கம்

உயிரே முக்கியம் ஒலிம்பிக் அல்ல

சீன எல்லையில் தற்கொலைப் படையை நிறுத்த தலிபான்கள் திட்டம்