(UTV | கொழும்பு) – மரண தண்டனை விதிக்கப்பட்டு பூஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் வெலே சுதா, சிறை பொறுப்பதிகாரியின் திருமணத்திற்கு 100 விஸ்கி ரக மதுபோத்தல்களை வழங்கிய விவகாரம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு – வெலிக்கடை சிறையில் வெலேசுதா தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பூஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டார்.
இவ்வாறு மாற்றப்பட்டு சிறிது வாரங்களில்தான் மேற்படி சம்பவம் நிகழ்ந்திருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் குறித்து புலனாய்வுப் பிரிவும், சிறைச்சாலை விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவும் துரித விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
‘வெலே சுதா’ என அழைக்கப்படும், கம்பள விதானகே சமன்த குமாரவிற்கு கடந்த 2015ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
ஹெரோயின் போதைப் பொருள் 7.06 கிராமை தன்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இவர், கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்
குறித்த குற்றங்கள் நீரூபணமானதை அடுத்து, நீதிபதி பிரீதி பத்மன் சுரசேனவினால் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜனாதிபதி குறிப்பிடும் திகதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் வெலிக்கடை சிறையில், உயிர் பிரியும்வரை கழுத்தில் சுருக்கிட்டு தூக்கில் இடுமாறு நீதிபதி இதன்போது உத்தரவிட்டார்.
குறித்த நபர், கல்கிஸ்ஸை நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள பிரதேசத்தில், ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.