உள்நாடுசூடான செய்திகள் 1

நிழல் உலக தாதா’வின் விசாரணைகளில் துரிதம்

(UTV | கொழும்பு) – தேடப்பட்டு வந்த பாதாள உலக உறுப்பினர் அங்கொட லொக்கா உயிரிழப்பு தொடர்பான உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில், அவரது கை, கால் விரல் நகங்கள் நீல நிறத்தில் இருந்ததாகவும் இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து குறித்த செய்தியில் தெரிவிக்கையில்;

“.. இலங்கை போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நிழல் உலக தாதா அங்கொட லொக்கா, பிரதீப் சிங் என்ற பெயரில், கோவையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கோவை காளப்பட்டியில் தனது காதலியுடன் வசித்து வந்த அங்கொட லொக்கா, கடந்த ஜூலை 4ம் திகதி, உயிரிழந்த நிலையில் மதுரையில் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை காளப்பட்டி பகுதியில் அங்கொட லொக்காவுடன் வசித்து வந்த அமானி தான்ஜி என்ற இலங்கையை சேர்ந்த பெண், போலி ஆவணங்களை தயாரிக்க உதவிய, மதுரையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த அவரது நண்பர் தியானேஸ்வரன் ஆகியோரை கோவை மாநகர பொலிஸார் கைது செய்தனர்.

வழக்கு சி.பி.சி.ஐ.டி., வசம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., பொலிஸார் கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் 5 நாள் தடுப்பு காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., பொலிஸார் நேற்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அங்கொட லொக்காவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அவரது கை, கால் விரல் நகங்கள் நீல நிறத்தில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அங்கொட லொக்காவின் உடற்பாகங்கள் தடவியல் சோதனைக்காக சென்னை அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர், விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் சி.பி.சி.ஐ.டி., பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், இரசாயன அறிக்கை வெளியான பிறகே விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா அல்லது இயற்கையான மரணமா என்பது தெரியவரும்.” என கூறப்பட்டுள்ளது

Related posts

உலகளவில் பலி எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

கடந்த 24 மணித்தியாலங்களில் 15 பேர் பலி

இரு தினங்கள் அரச விடுமுறை நாட்களாக அறிவிப்பு