(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுவது நிறுவன பிரதானிகளின் பொறுப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான செயலணியுடனான நேற்றைய சந்திப்பின்போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தும் வரை சமூக ரீதியாக வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதனால் சமுதாய ரீதியாக இலகுவாக செய்யக்கூடிய பரிசோதனைகளை தொடர்ந்து செய்ய வேண்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாடு சுமூகமான நிலையை அடைந்திருந்தாலும், நோய்த் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிட கூடாது. புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் போன்றவற்றில் உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் போன்ற இலகுவான பரிசோதனைகளை தினமும் முன்னெடுப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
முகக் கவசம் அணிதல், கைகழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் எந்த நேரமும் பின்பற்றப்பட வேண்டியவைகளாகும். காய்ச்சல், தொண்டைவலி போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் அதுபற்றி புரிந்துகொண்டு சமூகத்தில் சேர்ந்து வாழாது தனித்திருந்து நோய்த் தொற்று ஒழிப்புக்கு பங்களிக்க முடியுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் ஆகியோருடன் கொவிட் ஒழிப்பு செயலணியின் அங்கத்தவர்களும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.