(UTV | ஜெனீவா) – கொரோனா வைரஸ் தொற்று இன்னும் உச்ச நிலையை தொடவில்லை என உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் ஊடக சந்திப்பு ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“.. கொரோனா வைரஸ் தொற்று பரவல் வேகம் எடுத்து வருகிறது. ஆனாலும் நாம் இன்னும் அந்த தொற்று நோயின் உச்சத்தை தொடவில்லை.
உலகளவில் இறப்பு சமப்படுத்தப்பட்டு விட்டதாக தெரிகிறது. உண்மையிலேயே சில நாடுகளில் இறப்பு எண்ணிக்கையை குறைப்பதில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. ஆனால் மற்ற நாடுகளில் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது.
உலக சுகாதார நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் கடந்த வார இறுதி நாட்களில் உலகளவில் 4 இலட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு பதிவானது. உலகமெங்கும் 1 கோடியே 21 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பதிவாகி உள்ளது. 5.35 இலட்சம் பேர் இறப்பும் பதிவாகி இருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று மிகவும் ஆபத்தானது என்று இந்த தொற்று நோயின் ஆரம்ப காலத்தில் இருந்து, நீண்ட காலமாக கூறி வருகிறோம். ஆரம்பத்தில் இருந்தே இதை நமது முதல் பொது எதிரி என்று கூறினோம்.
இது இரண்டு ஆபத்தான சேர்க்கைகளை கொண்டிருக்கிறது. ஒன்று, வேகமாக பரவுகிறது. மற்றொன்று, இது ஆட்கொல்லி. எனவேதான் நாங்கள் கவலை கொண்டோம். உலகத்தை தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்.
கொரோனா வைரஸ் தொற்று மனித குலத்துக்கு எதிரி. இதில் மனிதகுலம் ஒற்றுமையாக நின்று போரிட்டு, தோற்கடிக்க வேண்டும்.
இப்படிப்பட்ட தொற்று நோய், நூற்றாண்டில் ஒரு முறை வருகிறது. இது ஆபத்தான வைரஸ். 1918-ம் ஆண்டுக்கு பின்னர் (ஸ்பானிஷ் புளூ வெளிப்பட்ட பின்னர்) இது போன்று ஒரு வைரஸ் வெளிப்பட்டது இல்லை…” எனத் தெரிவித்துள்ளார்.