(UTV | கொழும்பு) – பல இழுபறிகளுக்கு மத்தியில் எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தல் மக்கள் மத்தியில் மிகவும் முக்கியமானதும் பல எதிர்பார்ப்புகளையும் கொண்ட ஒரு தேர்தல் ஆகும். இந்தத் தேர்தல் பல கோணங்களிலும் பல வரலாற்று முக்கியத்துவங்களையும் சம்பவங்களையும் தாங்கியுள்ளது எனலாம்.
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை இதுவரையில் (இந்த ஆக்கம் எழுதும் வரையில்) 1.21 கோடியைக் கடந்துள்ள நிலையில் 5 இலட்சத்தையும் தாண்டிய பலி எண்ணிக்கை பதிவாகி வரும் இந்நிலையில் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது.
கொரோனாவுக்கு இலங்கையும் விதிவிலக்கல்ல, கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள இலங்கையில் இதுவரையில் 11 பேர் பலியாகியிருக்கின்றனர். சராசரியாக 2 தொடக்கம் 4, 5 பேர் வரையிலும், நாட்டில் சடுதியாக தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இதுவரையில் 2,350 பேரை இந்த வைரஸ் தாக்கியுள்ளது.
கொரோனா வைரஸின் பிடியில் இருந்து நாடு முழுமையாக விடுபடாத நிலைமையில் எந்த வேளையிலும் இரண்டாம் சுற்று நோய்த்தாக்கம் ஏற்படலாம் என்ற அச்சத்துக்கு மத்தியில் இலங்கையின் 16வது பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் 2020ம் ஆண்டு, 16வது பாராளுமன்ற தேர்தலை நோக்குவதற்கு முன்னர் நாம் 2018ம் ஆண்டின் அரசியல் வரலாற்றுப் புரட்சியினை குறுகிய கண்ணோட்டம் என்ற ரீதியில் அலசுவோம்.
சர்ச்சைக்குரிய 52 நாள் அரசாங்கம் [26 ஒக்டோபர் 2020]
இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, 2018ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ 2018 ஒக்டோபர் மாதம் 27ம் திகதி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
இலங்கையில் ஜனாதிபதியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன பதவி வகிக்கின்ற போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக பதவி வகித்திருந்தார்.
கடந்த 2018 பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் ராஜபக்ஷக்களின் புதிய கட்சி அதிர்ச்சிதரத்தக்க வகையில் பெற்ற வெற்றி ஜனாதிபதி சிறிசேனவின் அரசியல் பலவீனத்தை அம்பலப்படுத்திவிட்டது.
அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளுக்கு அந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பிரதமர் விக்கிரமசிங்கவின் கொள்கைகளையும் அணுகுமுறைகளையுமே குற்றஞ்சாட்டிய சிறிசேன அவரை பதவி நீக்க காரணங்களாக முன்வைத்திருந்தார்.
ஆனால், அரசியலமைப்புக்கான 19வது திருத்தத்தின் விளைவாக அவ்வாறு பதவி நீக்குவது சாத்தியமில்லை எனக் கண்ட சிறிசேன தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் மூலமாக பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுவதன் பின்னணியில் செயற்பட்டார். ஆனால் ரணில் அப்பிரேரணையை தோற்கடித்தார்.
இதனால் இலங்கை பாராளுமன்றில் பதற்ற நிலை தோன்றியது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்டிருந்தனர். இதற்கு எந்தவொரு கட்சியும் விதிவிலக்கல்ல. ‘ஜனநாயகம்’ என்ற கேள்விக்கு விடை தெரியாது மக்கள் அதிருப்தியடைந்தனர்.
பாராளுமன்றத்தில் பதற்றநிலை [2018 நவம்பர் 15]
இதனைத் தொடர்ந்து ஜனநாயகப் போராட்டங்கள் வெடிக்கும் அறிகுறி தெரிய, ஜனநாயகத்திற்காக நாட்டின் சட்டத்தினை / நீதியினை நாடும் முயற்சிகளில் ரணில் தரப்பினர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் நீதிமன்றினை நாடினர்.
இது அரசியல் யாப்புக்கு முரணானது எனக் கூறி இது தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் 2018 டிசம்பர் மாதத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார். இது இலங்கை வராலாற்றுப் பார்வையில் பெரும் வெற்றியாக பதிவாகியிருந்தது.
இலங்கையில் 52 நாட்கள் நடந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்தது. பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ பதவி இராஜினாமா செய்ய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
சர்ச்சைக்குரிய 52 நாள் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அமைச்சுகளுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய முடியாமல் அபிவிருத்திப் பணிகளில் பின்னடைவை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இத்தகைய பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகங்கொடுத்து வந்த நிலையில் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் முக்கியமான தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல் ஆகியவற்றில் தீவிரவாதிகள் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தார்கள். வெளிநாட்டவர்கள் உட்பட 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் நாடு துயரத்தில் மூழ்கியிருந்தது.
நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறியதால், ஐக்கிய தேசிய முன்னணி தனித்து ஆட்சி அமைத்தது. அதுவரை எதிர்க்கட்சியாக அங்கம் வகித்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறி எதிர்க் கட்சித் தலைவராக இருந்த இரா. சம்பந்தன் மிகவும் நாகரிகமான முறையில் பதவி விலகினார். அவருக்குப் பதிலாக பொதுஜன முன்னணி சார்பில் மஹிந்த ராஜபக்ஷ எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறியதால், ஐக்கிய தேசிய முன்னணி தனித்து ஆட்சி அமைத்தது. அதுவரை எதிர்க்கட்சியாக அங்கம் வகித்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறி எதிர்க் கட்சித் தலைவராக இருந்த இரா. சம்பந்தன் மிகவும் நாகரிகமான முறையில் பதவி விலகினார். அவருக்குப் பதிலாக பொதுஜன முன்னணி சார்பில் மஹிந்த ராஜபக்ஷ எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தீவிரவாதத் தாக்குதல்
சர்ச்சைக்குரிய 52 நாள் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அமைச்சுகளுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய முடியாமல் அபிவிருத்திப் பணிகளில் பின்னடைவை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இத்தகைய பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகங்கொடுத்து வந்த நிலையில் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் முக்கியமான தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல் ஆகியவற்றில் தீவிரவாதிகள் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தார்கள். வெளிநாட்டவர்கள் உட்பட 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் நாடு துயரத்தில் மூழ்கியிருந்தது.
ஜனாதிபதித் தேர்தல் 2019
கால் பதித்துள்ள 2020ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதியுடன் ஜனாதிபதியின் பதவிக் காலம் நிறைவடைய இருந்த நேரத்தில் முன்கூட்டியே 2019 நவம்பர் 16 இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறலாயிற்று.
இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ, அமைச்சராகவோ, பாராளுமன்ற உறுப்பினராகவோ இல்லாத நிலையில் பாதுகாப்பு செயலாளராக மாத்திரம் பதவி வகித்த கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏப்ரல் 21 குண்டு வெடிப்புக்குப் பிறகு முஸ்லிம் சமூகத்தை சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்க முஸ்லிம் அமைச்சர்களும் தமது ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில் எல்லோரும் ஒரே நேரத்தில் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தார்கள். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாகவே சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியிருந்தது.
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார் என்று மிகவும் எதிர்பார்ப்புடன் காணப்பட்டார். வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட சிறுபான்மை மக்களின் வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்கே அதிகமாகக் கிடைக்க சிறுபான்மை மக்களின் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மை வாக்குகளுடன் கோத்தபாய வெற்றி பெற்றார்.
அதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகி அவரது தலைமையில் காபந்து அரசாங்கம் அமைக்கப்பட்டது. இதில் சிறுபான்மை கட்சிகளுக்கு பெரிதாக பதவிகள் வழங்கப்படவில்லை.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 33 ஆம் உறுப்புரையின் பந்தி(2) இன் உப பந்தி (இ) உடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கைச் ஜனநாயக சோசலிசக் குடியரசின் 70 ஆம் உறுப்புரையினால் ஜனாதிபதி அவர்களுக்கு உரித்தாக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டும், 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் ஏற்பாடுகளைப் பின்பற்றியும், 2020 மார்ச் 02 ஆம் திகதி நள்ளிரவிலிருந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.
பொதுத் தேர்தலுக்காக பாராளுமன்றம் கலைக்கப்பட்ட தருணத்தில் கொரோனா வைரஸ் நாட்டை முழுமையாகப் புரட்டிப் போட்டது. சகல நடவடிக்கைகளையும் ஸ்தம்பிதம் அடையச் செய்து இயல்பு நிலைமைகளுக்கு இடையூறு விளைவித்தது. தேர்தலை நடத்த முடியவில்லை. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு ஜனாதிபதி இணங்கவில்லை. இதனால் அரசியலமைப்பு ரீதியான பிரச்சினைகள் தலையெடுத்தன.
நீதித்துறை, நிறைவேற்றதிகாரம், சட்டவாக்கத்துறை என்ற மூன்று முக்கிய தூண்களையும் கொண்டிருக்க வேண்டிய ஜனநாயக ஆட்சியில் பாராளுமன்றம் முடங்கிய நிலையில் நிறைவேற்றதிகாரம் மட்டுமே கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான போராட்டத்தால் ஆட்சி நிர்வாகச் செயற்பாடுகளில் மேலோங்கி இருந்தது.
பாராளுமன்ற கலைப்பு கொரோனா அச்சுறுத்தலும்
பாராளுமன்றக் கலைப்பும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தலை நடத்த மேற்கொள்ளப்பட்ட அரச தரப்பின் முயற்சியும் அடிப்படை உரிமை மீறலாக உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அந்த விடயங்கள் நீதிமன்றத்தினால் நிகராகரிக்கப்பட்டு விசாரணைகள் மறுக்கப்பட்டன.
இதற்கிடையில் அரச நிர்வாகக் கட்டமைப்பின் முக்கிய துறைகளில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டதுடன், இராணுவ மேலாதிக்கம் கொண்டதாக ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படத்தக்க வகையில் கிழக்கு மாகாணத்தின் தொல்லியல் இடங்களைப் பராமரிப்பதற்கான செயலணியும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி ஒழுக்கமுள்ள குடிமக்களை உருவாக்குவற்கான செயலணியும் ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டன.
நிறைவேற்றதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்ட இலங்கையின் ஜனநாயக ஆட்சி நிர்வாகம் இதனால் சர்வாதிகாரத்தைக் கொண்ட இராணுவ ஆட்சியாக மாறுகின்றது. மாற்றப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுக்களும் கண்டனக் குரல்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இடம்பெற்ற நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கமும் அதனுடன் பரவ ஆரம்பித்திருந்தது.
வேட்பு மனுத் தாக்கல் மார்ச் மாதம் 19ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், மார்ச் மாதம் 20ஆம் திகதி நாடு தழுவிய ரீதியிலான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
சுமார் ஒரு மாத காலம் ஊரடங்கு தொடர்ந்தமை மற்றும் கொரோனா அச்சுறுத்தல் நாட்டில் தொடர்ந்த நிலையில் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு பின்னர் தெரிவித்திருந்தது.
இலங்கையின் நிலைமை படிப்படியாக வழமைக்கு திரும்பிய பின்னணியில் ஜுன் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு எட்டியது.
எனினும், இலங்கையில் கொரோனா நிலைமை தொடர்ந்தமையினால் இரண்டாவது முறையாகவும் தேர்தல் திகதியை தேர்தல் ஆணைக்குழு பிற்போட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் 70 (1) சரத்தின் பிரகாரம், பாராளுமன்றம் அமைக்கப்பட்டு நான்கரை வருடங்களின் பின்னரே ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாராளுமன்றத் தேர்தலை ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேர்தல் நடத்தப்படும் விதம் தொடர்பில் சுகாதார வழிகாட்டிகள் அடங்கிய பரிந்துரைகள் அனைத்தும் சுகாதார அமைச்சினால் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு, அது தொடர்பிலான தேர்தல் ஒத்திகைகளும் இடம்பெற்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஆக்கம் – ஆர்.ரிஷ்மா