(UTV | இந்தியா) – நியமனங்கள் மற்றும் இடமாற்றம் ஆகியவற்றில் தாமதம் நிலவுவதனை விலக்கிக் கொள்ள அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு நடவடிக்கை எடுக்காதவிடத்து ஜூலை மாதம் 16ம் திகதி தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அறிக்கை ஒன்றினை வெளியிட்டு குறித்த சங்கம் இது தொடர்பில் தெரிவிக்கையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பயிற்சிகளை முடிக்கப்பட்ட தற்காலிக நியமனங்களாக சுமார் 2,000 இற்கும் மேற்பட்ட வைத்திய அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.
புதிதாக வைத்தியர்களை நியமித்தல் மற்றும் இடமாற்றங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பிலும் மருந்து மாஃபியாவை அம்பலப்படுத்திய மருத்துவ அதிகாரிகளுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசிடம் கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்துள்ளது.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு பதிலும் கிடைக்காதவிடத்து , ஜூலை 16ம் திகதி மத்திய குழு கூட்டத்திற்குப் பிறகு தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.