(UTV | இந்தியா) – கடந்த 2011ஆம் ஆண்டு இலங்கை அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான உலக கிண்ண இறுதியாட்டத்தின் போது ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் எவ்வித தொடர்புகளும் கிடைக்கவில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சிறிய தகவல் கிடைத்தால் கூட அது தொடர்பில் இந்திய கிரிக்கெட் சபை விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை குறிப்பிட்டுள்ளது.
குறித்த இறுதிப்போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பாடி 6 விக்கட் இழப்புக்கு 274 ஓட்டங்களை பெற்றிருந்தது.
பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி ஆரம்பத்திலேயே சச்சின் மற்றும் விரேந்திர சேவாக் ஆகியோரின் விக்கட்டுக்களை இழந்த போதும் மஹேந்திரசிங் தோனி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோரின் 109 என்ற இணைப்பாட்டத்துடன் முன்னேற்றம் கண்டது.
இறுதியில் யுவராஜ் சிங் மற்றும் மஹேந்திர சிங் தோனி ஆகியோர் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.
இந்தியா பெற்ற இந்த வெற்றி, உலக்கிண்ண இறுதிப்போட்டியில் 1983 க்கு பின்னர் 28 வருடங்கள் கழித்து காத்திருந்து பெற்ற முதல் வெற்றியாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் முன்னாள் விளையாட்டத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இது தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்தொன்றினை ஊடகமொன்றுக்கு வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.