கட்டுரைகள்

#JusticeForThariq முயற்சிகளும் கண்டனங்களும் வெறும் போலி தானா?

Image

 

சம்ப தினம் : 2020 மே 25

சம்பவம் : அழுத்கம – தர்கா நகரில் மனநிலை பாதிக்கப்பட்ட 14 வயதுடைய சிறுவன் மீது பொலிஸார் தாக்குதல்

சிறுவன் : மொஹமட் வஸீர் தாரிக் அஹமட்

(UTV | கொழும்பு) – கடந்த மே மாதம் 25ம் திகதி அழுத்கம – தர்கா நகர் ‘அம்பஹ சந்தி’ பகுதியில் மனநிலை குறைப்பாடுடைய 14 வயதான சிறுவர் ஒருவர் சைக்கிளில் பயணித்த வேளையில் அவர் பொலிஸ் சோதனை சாவடி ஒன்றில் வைத்து தாக்கப்பட்ட சிசிடிவி காணொளி பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகிய நிலையில், பல தரப்பினரும் இதற்கு கண்டனங்களையும் முறையான நீதியையும் கோரி வருகின்ற நிலையில் இதற்கு முற்றிலும் மாற்றமாக பொலிஸ் ஊடகப் பிரிவினால் நேற்றைய தினம் (05) அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளமையானது சமூகத்தில் பெரும் கேள்விக்கு குறியினையும் ஆதங்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

ஆம், தாரிக் அஹமட் ஒஸ்டிசம் எனும் நோய் குறைபாடுடைய மனநிலை குன்றிய 14 வயது சிறுவன். இவனுக்கு தாய் இல்லை சிறு வயது முதல் இவனுக்கு எல்லாமே தந்தை தான். இருக்க வீடு இல்லை, சில்லறை கடையில் நாட்கூலிக்கு இருக்கும் இவனது தந்தை மொஹமட் வஸீர் தன்னால் இயன்ற வகையில் இவனை கவனித்து வருகிறார்.

தாரிக் அஹமட் தனது 4 வயது தொடக்கம் மூளை வளர்ச்சி குறைபாட்டு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவன் 14 வயதை அடைந்திருந்தாலும் 6 வயது குழந்தைக்குரிய உடலியல் தன்மைகளையே அவர் கொண்டிருந்தார் என அவரது தந்தை தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று(05) வெளியிடப்பட்டுள்ள பொலிஸ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கையில்;

2020-05-25ம் திகதி அழுத்கம – தர்கா நகர் ‘அம்பஹ சந்தி’ யில் உள்ள பெட்ரோல் நிரப்பு நிலைய அருகில் மாலை 4:45 மணியளவில் தர்கா நகர் இலிருந்து வெலிப்பன்ன பகுதியை நோக்கிய பொலிஸ் சாவடியை நோக்கி முகக் கவசம் அணியாத நிலையில் சைக்கிளில் பயணித்த நபரை நிறுத்துமாறு சமிஞை காட்டப்பட்டுள்ளது.

அச்சந்தர்ப்பத்தில் குறித்த சைக்கிளோட்டி பொலிஸ் கட்டளையினை புறப்படுத்தாது வெலிப்பன்ன நோக்கிய பகுதிக்கு பயணித்துள்ளார். மீண்டும் சில நேரத்திற்கு பின்னர் அவர் குறித்த சாவடி ஊடாக பயணிக்க சைக்கிளை திருப்பும் போது பொலிஸாரினால் சைக்கிளை பிடித்து நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட சைக்கிள் கட்டுப்பாடின்றி வீதி அருகில் இருந்த மீன் விற்கும் தட்டில் மோதில் விழுந்துள்ளது.

அச்சந்தர்ப்பத்தில் சைக்கிளில் வந்த நபர் மிகவும் உரத்த குரலில் கத்தி தப்பிக்க முயற்சிக்கையில் பொலிஸார் அவரை பிடித்து நிலைமையினை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர். பின்னர் குறித்த இடத்திற்கு வருகை தந்த சிலரால் குறித்த நபர் மனநலம் குன்றியவர் எனவும் இவரது தந்தை சென்ட்ரல் வீதி, தர்கா நகரில் வசிப்பவர் என்றும் அறியப்படுத்தியுள்ளனர்.

அதற்கமைய பொலிஸாரினால் குறித்த சைக்கிளில் பயணித்த நபரின் தந்தை குறித்த வீதி சோதனைச் சாவடிக்கு அழைக்கப்பட்டு சைக்கிளுடன் அழுத்கம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது தந்தை பொலிஸில் வாக்குமூலம் வழங்குகையில், குறித்த சைக்கிளில் பயணித்த நபர் மனநிலை குன்றியவர் என்றும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் பொது தனக்கு எவ்வித அறிவித்தலும் வழங்காது வீட்டினை விட்டும் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்போது பொலிஸார் அவரிடம் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக் கொண்ட பின்னர் சிறுவனை தந்தையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரிகளிடம் முதலில் ஒழுங்காக இருந்து கொண்ட குறித்த சைக்கிளோட்டி மனநிலை குன்றியவர் என அறியப்படாதவிடத்து அவர் போதைப்பொருள் உபயோகித்திருப்பதாக சந்தேகம் நிலைவியுள்ளது. எனினும் மேலே கூறப்பட்டவாறு சிறுவன் தொடர்பில் தந்தை தெரிவித்திருந்த காரணங்களை முன்வைத்து தடுப்பு காவலில் வைத்து அல்லது நீதிமன்ற நடவடிக்கைகள் இன்றி இந்த சிறுவனை தந்தையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரிகளால் குறித்த சைக்கிளோட்டியினை பிடிக்க வழங்கப்பட்டுள்ள உரிய அதிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில் தாக்குதல்கள் எதுவும் இடம்பெற்றதாக இதுவரையில் வெளியாகவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் வெளித்தரப்பினரால் சமூக வலைத்தளங்களில் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பல்வேறு கோணங்களில் பிரச்சாரங்கள் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை நிரூபணமாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் டிஐஜி களுத்துறை வசம் மற்றும் களுத்துறை பிரிவு பொலிஸ் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் குறித்த சந்தர்ப்பத்தில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் ஏதும் கடமையில் இருந்து விலகி செயற்பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணை மற்றும் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தற்போது சிறுவனின் தந்தையின் வாக்குமூலத்தினை கொண்டு 16 வயதுடைய சிறுவன் களுத்துறை – நாகொட நீதிமன்ற வைத்திய அதிகாரி மற்றும் மனநல வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தியுள்ள நிலையில் இதுவரை வைத்திய அறிக்கை கிடைக்கப்பெறவில்லை.

அவ்வாறே, குறித்த சம்பவம் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பேரில் கொழும்பு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொலிஸ் அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் குறித்த அலுவலக அதிகாரிகள் கொண்ட குழுவொன்றும் விசேட விசாரணை ஒன்றினை முன்னெடுத்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு,
பொலிஸ் தலைமையகம்,
கொழும்பு 01.

குறித்த அறிக்கையில் பொலிஸார் தனது அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டு, பொலிஸாரின் செயலினை நியாயப்படுத்தும் வகையில் குறித்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளமையானது கேள்விக்குறியாகவுள்ளது எனலாம்.

மேலும் குறித்த பொலிஸ் ஊடக அறிக்கையில் பொலிஸார் தாக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்க சிறுவன் மீது காயம் ஏற்பட காரணம் தான் என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது. சிறுவன் தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு காணொளிகளில் எவ்வித சான்றுகளும் புலனாகவில்லை. அவ்வாறு இருக்க குறித்த சிறுவனின் காயங்கள் கூறுவது என்ன? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்திருக்க வேண்டும்.

மற்றைய கேள்வி பொதுமகன் ஒருவன் கைதாகும் பட்சத்தில் அல்லது பொலிஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் போது மனித நேயத்துடன் செயற்படுவதும் ஒரு கடமையே தாக்குவதற்கு எவ்வித அனுமதியும் இல்லை. அவ்வாறு இருக்க பொலிஸார் தாக்கவில்லை என்றால், அங்கு கூடின பொதுமக்கள் தாக்கினார்களா? அவ்வாறு என்றால் அவர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வருவது குறித்து பொலிஸ் ஊடக அறிக்கையில் குறிப்பிடவில்லையே.. நியாயம் என்பது பொதுவானது சட்டத்திற்கு முன்னர் இன மத பேதமில்லை. இதில் குறித்த நிகழ்வில் நியாயம் கிடைப்பதும் சந்தேகமே.

எனினும் நேற்றைய தினம் (05) குறித்த சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் செய்யப்படவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதிலிருந்து இவை வெறும் காய் நகர்த்தல்களே என பொலிஸ் ஊடக அறிக்கை தெளிவாக சுட்டிக்காட்டுவது என்பதி எனது நிலைப்பாடு.

எனினும், 1994 ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் சித்திரவதை, கடுமையான வலியை ஏற்படுத்தும் எந்தவொரு செயலும், உடல் ரீதியானதாகவோ அல்லது மனரீதியாகவோ ஒரு நபர் செய்த எந்தவொரு செயலுக்கும் தண்டனை அல்லது அவர் செய்ததாக சந்தேகிக்கப்பட்டு அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 7 வருடங்களுக்கும் குறைவான சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என சட்டம் கூறுகிறது.

குறித்த சம்பவத்திற்கு நீதி வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ,

சமகி ஜன பலவேகய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச,

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,

முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர,

அலி ஸாஹிர் மௌலானா,

முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார


மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் குறித்த சம்பவத்திற்கு நீதி கோரியுள்ளனர்.

சில சமூக ஊடகங்கள் “ஒஸ்டிசம் ” எனும் பெயரில் இனவாதத்தினை முஸ்லிம்கள் கக்குவதாகவும் மீண்டுமொரு கருப்பு ஜுலையினை எதிர்பார்ப்பதாகவும் விமர்சிக்கின்றனர். இவை அனைத்தும் அவரவர் கற்பனையே..

காத்திருக்கிறோம்.. சட்டத்தின் பதிலுக்காக..

 

தொகுப்பு : ஆர்.ரிஷ்மா

Related posts

சிங்கள தலைமைகளின் யுக்திகளில் பங்காளிக் கட்சிகளின் பொறுமைகள்

சமூக பரப்புக்குள் ஊடுருவும் வெறுமை வியூகங்கள்

கொவிட்-19 மற்றும் நீரிழிவு நோய்: இவை இரண்டும் ஆபத்தானது? இதை நாம் எவ்வாறு சமாளிப்பது?