வணிகம்

COVID-19 சவால்களை சமாளிப்பதற்கு NTB ‘விசேட வைப்புக் கணக்கு’ அறிமுகம்

(UTV | கொழும்பு) –COVID-19பரவல் காரணமாக நாடு எதிர்நோக்கியுள்ள ஒப்பற்ற சவால் நிலைமை மற்றும் நாட்டு குடிமக்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் போன்றவற்றைக் கவனத்தில் கொண்டு, இந்த இடர் நிலையை சமாளிப்பதற்கு தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி விசேட வைப்புக் கணக்கொன்றை (SDA) அறிமுகம் செய்துள்ளது.

நாட்டில் COVID-19 பரவலின் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு தமது பங்களிப்பை உறுதி செய்யும் வகையில், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி இலங்கையின் சகல வதியாதோர், இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், மையங்கள் மற்றும் நம்பிக்கை நிதியங்கள், சம்மேளனங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் இலங்கைக்கு அப்பால் பதிவு செய்யப்பட்ட இதர நிறுவனங்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் தமது வைப்புகளை வெளிநாட்டு நாணயத்தில் இலங்கையில் சேமிப்பாக முதலீடு செய்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசத்தின் பொருளாதார மீட்சிக்கு பங்களிப்பு வழங்குவது மாத்திரமன்றி, வங்கியின் 06 மற்றும் 12 மாத காலப்பகுதிகளுக்கு வழமையாக வழங்கப்படும் வட்டி வீதங்களை விட முறையே 1% மற்றும் 2% மேலதிக வட்டிகளை வழங்க முன்வந்துள்ளது. ஏற்றுக் கொள்ளப்படும் பிரதான வெளிநாட்டு நாணயங்களில் வைப்புச் செய்து SDA கணக்கொன்றை ஆரம்பிக்க முடியும் என்பதுடன், இணைந்த கணக்காகவும் பேண முடியும்.

தேசத்தின் மறுமலர்ச்சிக்காக வைப்பாளர்கள் SDA கணக்கில் வைப்புச் செய்யும் இந்த தொகையின் மீது எவ்விதமான வரிகளும் அறவிடப்படமாட்டாது என்பதுடன், வைப்பு முதிர்ச்சியின் போது எவ்விதமான சிக்கல்களுமின்றி அவற்றை தமது நாட்டில் மீளப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். மேலும், இந்தக் கணக்கு வெளிநாட்டு நாணயப் பரிமாற்று ஒழுங்குவிதிமுறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள உறுதி மொழியும் வழங்கப்பட்டுள்ளது. நேரடி வெளிநாட்டு பண அனுப்பல் அல்லது Inward Investment Account (IIA) ஊடாக கணக்குக்கு பணத்தை அனுப்ப முடியும்.

COVID-19 தொற்றுப் பரவும் சவால்கள் நிறைந்த காலப்பகுதியிலும், நோஷன்ஸ் ட்ரஸ்ட் அணியினால், வாடிக்கையாளர்களுக்கு இடைவிடாத சேவை வழங்கப்பட்டிருந்தது. சகல கிளைகளின் ஊழியர்கள் மற்றும் அழைப்பு நிலைய ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியிலும் தமது நிதித் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு சேவைகளை வழங்கியிருந்தனர். வெளிநாடுகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும், இந்த தேசிய நடவடிக்கையில், எமது வெளிநாட்டு பண அனுப்பும் முகவர்களினூடாக இந்த SDA கணக்கை ஆரம்பிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க வசதிகளை வங்கி ஏற்படுத்தியிருந்தது.

புதிய கணக்கு அறிமுகம் தொடர்பில் கிளை வலையமைப்பின் சிரேஷ்ட பதில் தலைவர் ஷெஹான் டேனியல் கருத்துத் தெரிவிக்கையில், ” COVID-19 தொற்று காரணமாக, எமது நாட்டின் பல்வேறு சமூகங்கள் மற்றும் பரந்த பொருளாதாரம் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. பொறுப்பு வாய்ந்த வங்கி எனும் வகையில், எமது முன்னுரிமைச் செயற்பாடுகளில், எமது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு பற்றி கவனம் செலுத்துவதுடன், தேசத்தை பாதுகாக்கும் தேசிய செயற்பாடுகளுக்கு உதவிகளை வழங்குவது நோக்கமாகும். விசேட வைப்பு கணக்கை அறிமுகம் செய்துள்ளதனூடாக, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, இந்த அவசர நிலையில் தேசிய முயற்சிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்குவதுடன், குறுங்கால மற்றும் மத்திய கால அடிப்படையில் இந்த பாதகமான நிலையை தணிப்பதற்கு பங்களிப்பு வழங்குவதுடன், அர்த்தமுள்ள வகையில் சிறந்தபெறுபேறுகளுக்கு பங்களிப்பு வழங்குகின்றது.” என்றார்.

Business Today சஞ்சிகையின் மூலமாக இலங்கையில் காணப்படும் மிகச்சிறந்த 15 வியாபாரங்களில் ஒன்றாக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் சௌகர்யம் எனும் அதன் நிலைப்பாடு என்பதற்கு தன்வசம் கொண்டுள்ள பெருமளவான நிதிசார் பொருட்கள் மற்றும் சேவைகள் காரணமாக அமைந்துள்ளன. இலங்கையின் முதலாவது முழுமையான டிஜிட்டல் வங்கியான FriMiஇன் பின்னணி வங்கியாக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அமைந்துள்ளது.

நாடு முழுவதும் வங்கி 96 கிளைகளை கொண்டுள்ளது. அத்துடன் தனது ATM வலையமைப்பை 127 பகுதிகளில் கொண்டுள்ளதுடன், 48 பண வைப்பு மற்றும் மீளப் பெறல் இயந்திரங்களையும் கொண்டுள்ளது. Lanka Pay வலையமைப்பில் 3500க்கும் அதிகமான ATMகளுடனும் இணைந்துள்ளது.

இலங்கையில் American Express® அட்டைகளை விநியோகிக்கும் ஏக உரிமையை கொண்ட வங்கியாக திகழ்கிறது.

Related posts

ஊரடங்குச் சட்டம் நீக்கும் வரை கொழும்பு பங்குச்சந்தைக்கு பூட்டு

குளமும் – கிராமும் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் குளங்கள் புனரமைப்பு…

பாகிஸ்தான்-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இருதரப்பு பேச்சுவார்த்தை