(UTV | கொழும்பு) –விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சின் பணிக்குழாம் அன்பளிப்பு செய்த 2,205,448.89 ரூபா நேற்று(20) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களும் இதன்போது பிரசன்னமாகியிருந்தார்.
அமைச்சர் மஹிந்த அமரவீர தனது மே மாத சம்பளத் தொகையான 66000 ரூபாவை ஜனாதிபதியிடம் கையளித்தார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் அன்பளிப்பு செய்த 1,326,449.00 ரூபா சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
சட்ட சங்கத்தின் தலைவர் மேலதிக சொலிசிடர் ஜெனரல் சுமதி தர்மவர்த்தன, சிரேஷ்ட மேலதிக சொலிசிடர் ஜெனரல் சரத் ஜயமான்ன, பிரதி சொலிசிடர் ஜெனரல் துசித் முதலிகே மற்றும் அரச சட்டத்தரணி இஷாரா ஜயரத்ன ஆகியோர் இதன் போது சமூகமளித்திருந்தனர். தம்புத்தேகம கமநல சங்கம் 200,000 ரூபாவை அன்பளிப்பு செய்ததுடன் இந்த நிகழ்வில் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன அவர்களும் பிரசன்னமாகியிருந்தார்.
அரச பாடசாலைகளில் பற்சிகிச்சையாளர்கள் சங்கம் 500,000 ரூபாவையும், மிலாகிரிய புனித போல் கல்லூரி 225,000 ரூபாவையும் நிதியத்திற்காக ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,128,027,502.02 ரூபாவாகும்.
இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.
0112354479,011354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.