(UTV – கொழும்பு) – எதிர்வரும் ஜுன் மாதம் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதாக அறிவித்து வெளியாக்கப்பட்ட வர்த்தமானிக்கும் பாராளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானிக்கும் எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் இன்றைய தினம் (20) மூன்றாவது நாளாக உச்ச நீதிமன்றில் பரிசீலிக்கப்படவுள்ளது.
குறித்த இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில் புவனகே அலுவிஹாரே, சிசிர டி ஆப்ரு, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழுவினால் பரிசீலிக்கப்படவுள்ளது.
இதன்படி இன்றைய தினமும் பிரதிவாதி தரப்பு வாதங்கள் முன்வைக்கப்படவுள்ளன.
சட்டத்தரணி சரித குணரத்ன, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட 6 தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, அதன் உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்திரணி என்.ஏ.ஜே.அபேசேகர, பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.