(UTV|கொழும்பு)- அனைத்து அரச அதிகாரிகளும் ஒரு நாள் சம்பளத்தை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையானது முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஏற்புடையது அல்லவென பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொரானா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் நிதி சிக்கல்களை சமாளிக்கும் நோக்கிலும் ஒரு நாளுக்கான சம்பளத்தை விதவைகள் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்யுமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி P.B. ஜயசுந்தர கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் முப்படையினர் மற்றும் பொலிஸாரிடம் ஒரு நாள் சம்பளத்தை அறவிடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்ற தகவல் உண்மைக்கு புறம்பானது என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கைக்குள் முப்படையினர் மற்றும் பொலிஸார் உள்வாங்கப்பட மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் பாதுகாப்பு படைத் தலைவர், பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு இது தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.