(UTV | கொழும்பு) -மக்கள் நகரங்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டு மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்திருக்கும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடு திறக்கப்பட்ட பின்னர் மக்கள் அநாவசியமான காரணங்களுக்காக வெளியில் செல்வதையோ அல்லது ஒன்றிணைவதையோ நாம் எதிர்பார்க்கவில்லை.
நாளை நாட்டைத் திறப்பதன் ஊடாக அரசாங்கம் இரு விடயங்களையே பிரதானமாக எதிர்பார்க்கிறது.
முதலாவதாக பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக தனியார்துறை நடவடிக்கைகளை ஆரம்பித்தல், இரண்டாவது பொருளாதாரத்திற்கு உயிரூட்டுவதற்காக அரச இயந்திரத்தைச் செயற்படுத்தல் ஆகியவை ஆகும்.
கடந்த ஒருவார காலமாக மக்கள் மத்தியில் தொற்று ஏற்பட்டதாக அறியப்படவில்லை. வெலிசர கடற்படை முகாமின் வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பை பேணியவர்களுக்கே தொற்று ஏற்பட்டுள்ளது.
இவற்றை கருத்திறைக் கொண்டே நாட்டில் பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்காக முடக்கத்தைத் தளர்த்துவதற்குத் தீர்மானித்தோம்” என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.