(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தாக்கம் இப்போது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அரசாங்கம் படிப்படியாக ஊரடங்கு உத்தரவை தளர்த்தத் திட்டமிட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று (10) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
வைரஸை கட்டுப்படுத்த பொதுமக்கள் இராணுவம் மற்றும் சுகாதார தரப்பினருக்கு வழங்கிய ஒத்துழைப்பினை நாடு வழமைக்கு திரும்புவதற்கும் வழங்க வேண்டும். ஆகவே அனைவரும் பொறுப்புடனும், பாதுகாப்புடனும் செயற்பட வேண்டும்.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நாடுகள் இலங்கை தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அனைத்து தரப்பினரது ஒத்துழைப்பினால் இந்த வெற்றியை அடைய முடிந்துள்ளது என்பதை பெருமித்த்துடன் குறிப்பிட வேண்டும்.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் லண்டனில் வாழ்ந்த 25 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளார்கள்.ஆனால் இலங்கையில் இதுவரையில் 9 பேர் மாத்திரமே இறந்துள்ளார்கள்.என்பதை குறிப்பிட வேண்டும். கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்ச தெரிவு செய்யப்படாமல் இருந்திருந்தால் இவ்வாறான வெற்றிகளை பெற முடியாமல் போயிருக்கும்.
ஊரடங்கு சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்திய போது முழு நாட்டையும் முடக்குமாறு குறிப்பிட்டார்கள்.உலகில் எந்த நாடும் ஆரம்பத்தில் நாட்டை முழுமையாக முடக்கவில்லை.
அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் செயற்படத் தொடங்கும். ரயில்கள் மற்றும் பஸ்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்.
பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகள் மறு அறிவித்தல் வரை மூடியே இருக்கும்.
அத்தோடு பி.சி.ஆர். பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் தனிமைப்படுத்தல் மையங்கள் திறந்து வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள அவர், இயல்புநிலையை மீட்டெடுக்கத் தொடங்கிய பிறகும், சில பகுதிகளை தனிமைப்படுத்தி முடக்கவும், ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிய தேவையும் ஏற்படலாம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.