உள்நாடுசூடான செய்திகள் 1

அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு விஷேட நடவடிக்கை

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியதன் பின்னர், குறைந்தளவானோரின் பங்குபற்றுதலுடன் அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலையில் பேணுவதற்கு உதவும் வகையில், அரச மற்றும் தனியார் துறைகளின் சேவைகளை திட்டமிடுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்தியாவசிய சேவைகளை வழங்கும் முக்கிய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

நீர்க்குழாய்களை பொறுத்துதல், வீதிகளை நிர்மாணித்தல் போன்ற கட்டுப்பாட்டுடன் செய்யக்கூடிய அபிவிருத்தி பணிகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஊழியர்களை கடமைக்காக அழைக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய ஊழியர்களை அழைப்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேல் மாகாணம் உட்பட ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுலில் உள்ள பிரதேசங்களில் சேவைகளை பேணுவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார். இதேவேளை, போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளின் மூலம் விவசாய அறுவடைகளை கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் விவசாயிகளுக்கு பாரிய நிவாரணம் கிடைக்குமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு அரசாங்கம் முறையானதொரு நிகழ்ச்சித்திட்டத்தை பின்பற்றிய போதும் மக்கள் அறிவுறுத்தல்களை உரிய முறையில் பின்பற்றாமை நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கு தடையாக அமைந்துள்ளது. மக்கள் வாழ்க்கையை இயல்புநிலைக்கு கொண்டு வரும் நோக்குடன் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தி சேவைகளை முன்னெடுக்கும் போதும் வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts

விமான நிலைய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

சமையல் எரிவாயுக்காக வரிசையில் நிற்க வேண்டாம்

தடுப்பூசி வழங்காவிடின் தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பு