(UTV | கொவிட் – 19) – மொபைல் வணிகத்தில் ஈடுபடும்போது சரியான சுகாதார முறைகளை பின்பற்றாத வர்த்தகர்களின் வர்த்தக உரிமங்கள் இரத்து செய்யப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்யும் மொபைல் விற்பனையாளர்கள் பாதுகாப்பான முறையில் வியாபாரம் செய்யாமையால் கொவிட் 19 வைரஸ் பொது மக்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் விளைவாக, வீடு வீடாகச் சென்று மீன், காய்கறிகள், பழங்கள் மற்றும் பேக்கரி தயாரிப்புகளை ஒன்லைன் முறையின் கீழ் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் நிறுவனங்களின் மொபைல் வணிகத்தை முன்னெடுப்பதில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதற்கமைய சுத்தமான சீருடை அணிவது, பொருத்தமான காலணிகளை அணிவது, வியாபாரம் செய்யும் போது முக கவசங்களை அணிவது, மற்றும் கையுறைகளை பயன்படுத்துதல், கைக்கழுவும் திரவங்களை உபயோகித்தல் ஆகியனவும் கைக்கொள்ள வேண்டும்.
மேலும் பேக்கரி உற்பத்தி பொருட்கள், சமைத்த உணவு போன்றவற்றை வழங்கும் போது அவற்றை கைளில் தொட்டு வழங்குவதை தவிர்க்குமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.
உணவு பொருட்களை காகிதத்திலோ அல்லது பிற அட்டைகளிலோ விற்பது, பணத்தைத் தொட்ட பின்னர் உணவுப் பொருட்கள் அல்லது வேறு பொருட்களைத் தொடக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் உணவுகளை வழங்கும் போது ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பேணுமாறும் பொலிஸார் மேலும் அறிவுறுத்தியுள்ளனர்.