உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் ஊரடங்கு உத்தரவு பகுதியளவில் தளர்வு

(UTV|கொழும்பு)- கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களிலும், கண்டி, கேகாலை, மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் சில பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த பகுதிகள் உட்பட ஏனைய மாவட்டங்களில் இன்று(20) காலை 5.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த மாவட்டங்களில் இன்று காலை ஐந்து மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இரவு 8.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கின்றது

அத்துடன் கண்டி மாவட்டத்தின் அலவத்துகொட, அக்குரணை ஆகிய பகுதிகளிலும், கேகாலை மாவட்டத்தின் வரகாபொலயிலும், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பகுதியிலும் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்டங்களில் உள்ள ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம், இன்று காலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதுடன் இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு அன்று இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தின் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், பம்பலப்பிட்டி, வாழைத்தோட்டம், மருதானை, கொத்தட்டுவ, முல்லேரியா, வெல்லம்பிட்டி, கல்கிஸ்ஸை, தெஹிவளை மற்றும் கொஹுவளை பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த கொழும்பின் ஏனைய பகுதிகளில் எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு அன்று இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் ஜா-எல, கொச்சிக்கடை மற்றும் சீதுவ பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் புத்தளம் மாவட்டத்தில் புத்தளம், மாரவில மற்றும் வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தொடந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

மேலும், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் உள்ள பிரதான வீதிகளை பணிக்குச் செல்வதற்கு அல்லது அத்தியவசிய தேவைகளுக்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இஸ்லாமிய அரச ஊழியர்களுக்கு புதிய சுற்றறிக்கை

ஒரு வாரத்தில் 2,142 டெங்கு நோயாளர்கள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்று