(UTVNEWS | கொவிட் -19) –எதிர்வரும் ஏப்ரல், 22 புதன்கிழமை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் தலைவர்கள் 22ஆம் திகதி புதன்கிழமை முதல் ஒன்றுகூடி தமது நிறுவனங்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து திட்டமிட வேண்டும்.
ஏப்ரல் 22,23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் தமது பிரதித் தலைவர்கள் உள்பட ஏனைய முக்கிய அதிகாரிகளை ஒன்றுகூட்டி அந்தந்த நிறுவனங்களின் சேவைக்கு அழைக்கப்படவுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை, அழைக்கப்பட வேண்டிய அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் பணிகள் ஆகியவற்றை தீர்மானிக்குமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டங்களில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் செயற்திட்டமொன்றை தயாரித்து 27 திங்கட்கிழமை முதல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. மேலதிக அறிவிப்பு வரும் வரை, இந்த மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு இரவு 8:00 மணி முதல் மறுநாள் காலை 5:00 மணி வரை அமுலில் இருக்கும்.”