உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்கு சட்டம் பகுதியளவில் தளர்த்தப்பட்டுள்ளது

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் சில பகுதிகளில் தளர்த்தப்படவுள்ளது.

ஜனாதிபதி செயலகம் இன்று(18) மாலை விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்தறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 18 மாவட்டங்களில், எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 5.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் ஜனாதிபதி செயலக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 8 மணி முதல் மறு நாள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கண்டி , கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அலவத்துகொடை , அக்குரணை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த 3 மாவட்டங்களினதும் ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் தினமும் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் இரவு 8 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ் , பம்பலப்பிட்டி, வாழைத்தோட்டம் , மருதானை, கொத்தட்டுவ, முல்லேரியா, வெல்லம்பிட்டி, கல்கிசை, தெஹிவளை மற்றும் கொஹூவலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

தவிர்ந்த ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஏப்ரல் 22 ஆம் திகதி புதன்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் இரவு 8 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படவுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் – மாரவில மற்றும் வென்னப்புவ ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் களுத்தறை மாவட்டத்தின் பண்டாரகம, பேருவளை, பயாகல மற்றும் அளுத்கம ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட யட்டவர பண்டாரவின் சடலம்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட உள்ள அலய்னா பி. டெப்லிடஸ்

பெயர் களங்கப்படும் விதத்தில் முன்னெடுக்கப்படும் போலி பிரச்சாரங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை