(UTV|கொவிட் -19) – கொவிட் 19 என இனங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவும் அபாய வலய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற போப்ஸ் (Forbes) சஞ்சிகை வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முறையே இத்தாலி, அமெரிக்கா, பிரித்தானியா நாடுகள் ஒன்று முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
மேலும், டீப் நொலேஜ் குரூப் ( Deep Knowledge Group ) என்கிற சர்வதேச நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் சுமார் 20 நாடுகள் தரப்படுத்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன்படி கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவுகின்ற அபாய வலய நாடுகளின் பட்டியலில் இலங்கை 16ஆவது இடத்தை வகிக்கின்றது.
இத்தாலி முதலாவது இடத்தையும், அமெரிக்கா இரண்டாவது இடத்தையும், பிரித்தானியா மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கின்றது.
முதல் 10 நாடுகளில் ஸ்பெயின், பிரான்ஸ், சுவீடன், ஈரான், ஈக்குவாடோர், பிலிப்பைன்ஸ், ரோமானியா ஆகிய நாடுகளும் அதன் பின்னரான பட்டியலில் நைஜீரியா, ரஷ்யா, பங்களாதேஷ், மெக்ஸிக்கோ, இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, மியன்மார், கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளும் காணப்படுகின்றன.
இலங்கையில் நேற்றைய தினம் (15) இரவு வரை 238 கொரோனா வைரஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் தொற்றுக்குள்ளானோரில் 65 பேர் பூரண சுகம் பெற்று வீடு சென்றுள்ளதோடு, 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது