உள்நாடு

வில்பத்து தொடர்பிலான உண்மையை வெளிப்படுத்த எந்த அரசியல் தலைமையும் முன்வரவில்லை” – ரிஷாட் பதியுதீன்

(UTV|கொழும்பு) – “வில்பத்து” விவகாரம் தொடர்பில், பேரினவாதிகள் தன்மீது தொடர்ச்சியான பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றபோதும், எந்த ஓர் அரசியல் தலைமையும் இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லையெனத் தெரிந்திருந்தும், அதனை வெளிப்படையாகச் சொல்வதற்கு தயங்குகின்றனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார், முசலியில் நேற்று முன்தினம் (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று, உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

“இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக மக்கள் வாழாத பிரதேசம் காடுகளால் சூழப்பட்டு, கண்ணிவெடிகள் விதைக்கப்பட்டிருந்த வேளைதான், சமாதானம் ஏற்பட்ட பின்னர், மீள்குடியேற்றத்தை ஆரம்பிக்க வேண்டியிருந்தது.

மிதிவெடிகளும் கண்ணிவெடிகளும் அகற்றப்பட முடியாதிருந்த முசலிப் பிரதேசத்தில், “உடனடியாக மீள்குடியேற்ற முடியாது. கண்ணிவெடிகளை அகற்ற காலம் போதாது” என அரசாங்கம் கைவிரித்தது. இந்தப் பணியை மேற்கொள்ள அரசுக்கு முடியாவிடின், தனியார் நிறுவனங்களைப் பயன்படுத்தி கண்ணிவெடிகளை அகற்ற முடியுமென தைரியமாக எடுத்துரைத்தோம். அமைச்சராக இருந்ததனால் அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம். கண்ணிவெடி அகற்றும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து, மீள்குடியேற்றப் பணியை தொடங்கினோம்.

முசலிப் பிரதேசங்களான கொண்டச்சி, முள்ளிக்குளம், காயாக்குழி, கரடிக்குழி, மறிச்சுக்கட்டி, பாலைக்குழி என்பவற்றில் பணிகளைத் தொடங்கினோம். பின்னர், புதிய கிராமமான அளக்கட்டினையும் உருவாக்கி, எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகப் பணி செய்தோம்.

இவ்வாறான மக்கள் நல்வாழ்வுப் பணிகளை தைரியமாக செய்ததனாலேயே, இனவாதிகள் என்னை துரோகியாகவும் விரோதியாகவும் பார்க்கின்றனர். வில்பத்துக் காட்டை நாசப்படுத்திய ஒருவனாக சித்தரிக்கின்றனர்.

‘மக்கள் மீள்குடியேறிய பகுதி “வில்பத்து” அல்ல. அவை அவர்களின் பூர்வீக நிலங்கள்தான்’ என இடித்த்துச்சொல்ல, எந்தவொரு அரசியல்தலைமையும் எமக்குத் துணைக்கு வரவில்லை. இந்த உண்மையைச் சொன்னால் தங்களுக்கும் அவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகின்றனர்.

வன்னி மக்களாகிய நீங்கள் எனக்குத் தந்த அதிகாரத்தினால், எம்மால் நாடாளாவிய ரீதியில் பரந்துபட்டு சேவையாற்ற முடிந்தது” எனக் கூறினார்.

ஊடகப்பிரிவு –

Related posts

கொரோனாவினால் மரணித்த ஒருவரின் இறுதிக் கிரியைகள் பற்றி உலமா சபை

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து சமூக ஊடகங்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்த பெண்!

காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு நிவாரணம்