(UTV|இந்தியா) – இந்தியாவின் காரைக்காலுக்கும், இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி, இந்திய மத்திய அமைச்சருக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் வே.நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
காரைக்காலுக்கு – இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் கடந்த 27 ஆம் திகதி நடைபெற்றிருந்தது.
இந்த கூட்டத்தின் முடிவில், காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தத் திட்டத்தை விரைவில் செயல்படுத்த குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.
அந்த குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்தத் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொது மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் மத்திய, மாநில அரசுகளின் ஆதரவுடன் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை செயல்பாட்டுக்கு வரும் என இந்திய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்துக்கு தடையை ஏற்படுத்தும் வகையில் இந்திய மத்திய இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் காரைக்கால் – இலங்கை இடையே பயணிகள் கப்பலை இயக்க சில நாட்களுக்கு முன்னரே மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது