உள்நாடு

சஹ்ரானின் தாக்குதல், வில்பத்து விவகாரத்தை மூலதனமாக்கி ஆட்சியை பிடித்தவர்கள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்?

(UTV|கொழும்பு) – சஹ்ரானின் தாக்குதல் மற்றும் வில்பத்து விவகாரம் என்பவற்றை பிரசாரங்களாகப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த கோட்டாபயவின் அரசாங்கம், இனியும் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்காது நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் அவற்றின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சாய்ந்தமருதுக்கு வழங்கப்பட்ட உள்ளூராட்சி சபையை இரத்துச் செய்துள்ளதாக அறிகின்றோம். அதன் உண்மைத்தன்மை தெரியாது. அந்தப் பிரதேச மக்களுக்கு தனியான சபை வழங்கியமை, சஹ்ரானுக்கு உதவி செய்ததற்கு பகரமாக வழங்கப்பட்டதாக, ஹிருணிக்கா பிரேமச்சந்திர எம்.பி கூறிய கூற்றினையும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று மாலை (20) உரையாற்றிய ரிஷாட் பதியுதீன் எம்.பி மேலும் கூறியதாவது,

“இந்த ஆட்சியில் நாங்கள் எதிர்பார்த்ததை விட வித்தியாசமான முறையில் பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடர்கின்றன. குறிப்பாக, என்னைப்பற்றி தொடர்ச்சியாக இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை பரப்பி வருகின்றனர். ஊடகங்களில் இந்த அபாண்டங்கள் பூதாகரப்படுத்தப்படுகின்றன. மன்னாரில் எனது வீடு சோதனையிடப்பட்டு, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக ஒரு செய்தி. எனது மனைவியின் பெயரிலான வீடொன்று முற்றுகையிடப்பட்டு, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக இன்னுமொரு செய்தி. எனது பெயரில் அமெரிக்காவில் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் வைப்பிலிடப்பட்டதாக விமல் வீரவன்சவினால் மற்றுமொரு கட்டுக்கதை. இந்தப் பொய்கள் ஊடகங்களில் வைரலாக பரப்பப்படுகின்றன. இவ்வாறான எந்தவொரு ஆவணங்களும் எனது வீட்டிலோ, மனைவியின் வீட்டிலோ கைப்பற்றப்படவில்லை என்பதை, இந்த உயர்சபையில் பொறுப்புடன் கூறவிரும்புகின்றேன். வேறு எவரின் வீட்டில் எதையோ எடுத்துவிட்டு, எங்கள் மீது பழியை சுமத்துகின்றனர். எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதும் என்னை சிறையில் அடைப்பதுமே இவற்றின் உள்நோக்கம். அத்துடன், எனது கட்சி ஆதரவாளர்களிடம் மனக்கிலேசத்தை உருவாக்கி, அவர்களின் மத்தியில் அச்சத்தை உருவாக்குவதும் இவர்களின் இன்னுமொரு சூழ்ச்சி.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், வங்குரோத்து அரசியல் கூட்டமொன்று, தங்களது இருப்பை தக்கவைப்பதற்காகவும், சரிந்துபோன தங்களின் செல்வாக்கை தட்டிநிமிர்த்துவதற்காகவும் சஹ்ரானின் தாக்குதலை மிகவும் கச்சிதமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். அந்தவகையிலே, சிறிய கட்சி ஒன்றை வைத்திருக்கும் இனவாத அரசியல்வாதி ஒருவர், என்னைப்பற்றிய அபாண்டங்களை பரப்புவதில் முன்னிற்கிறார். கடந்த ஆட்சியில் அவரது தில்லுமுல்லுகளும் கில்லாடித்தனங்களும் சொல்லில் அடங்கா. அவரின் ஊழல்கள் தொடர்பாகவும் அவரது மனைவியின் திருட்டு மோசடிகள் தொடர்பிலும் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதை, இந்த உயர் சபையும் நாடும் நன்கறியும்.

2001ஆம் ஆண்டில் இந்த பாராளுமன்றத்துக்கு நான் முதன் முதலாக தெரிவானபோது, எனது சொத்துக்கள் தொடர்பிலும் எனது மனைவியின் சொத்துக்கள் தொடர்பிலும் முறைப்படி தெரியப்படுத்தியதோடு, வருடாவருடம் எனது சொத்து விபரங்கள் மற்றும் வருமானங்களை உரிய திணைக்களத்துக்கு கையளித்து வருகின்றேன். அதைவிட ஒரு ரூபாய் கூட என்னிடம் மேலதிகத் தேட்டம் இல்லை.

சிறுபான்மை சமூகம் சார்ந்த கட்சியாகவும் சிறிய கட்சியாகவும் நாங்கள் இருப்பதனால், எமது கட்சியை ஒரு இனவாதக் கட்சியாகவும் மதவாதக் கட்சியாகவும் காட்டி, தமது அரசியலை பலப்படுத்துவதற்கு, எங்களை மூலதனமாகப் பயன்படுத்துகின்றனர். இந்த அரசாங்கத்தின் தற்போதைய இனவாத அமைச்சர், இந்த விடயத்தில் மிகவும் கீழ்த்தரமாக செயற்படுகின்றார். என்மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்குமாறு, நான் அவருக்கு சவால் விடுக்கின்றேன். அத்துடன், அவரிடம் மானநஷ்டஈடு கேட்டு கோரிக்கை கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளேன். உரிய சட்டநடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகின்றேன்.

இந்த வங்குரோத்து அரசியல்வாதிகள் கனவு காண்பது போன்று, எமது அரசியல் பயணத்தை முடக்கவும் முடியாது. தடுக்கவும் முடியாது. இவர்களால் பொய்மையை ஒருபோதும் உண்மைப்படுத்த முடியாது. தூய்மையான பாதையில் நேர்மையான எண்ணங்களுடன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் நாம், நல்லதையே செய்திருக்கின்றோம். செய்து வருகின்றோம்.

வன்னி மாவட்டத்தில் சிறுபான்மையாக வாழும் சிங்கள மக்கள், பயங்கரவாத நடவடிக்கையில் பாதிப்புற்று, உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்தபோது, நாம் உதவியிருக்கின்றோம். அதேபோன்று, இறுதி யுத்தத்தில் பாதிப்புற்று அபலைகளாக வந்த தமிழ் மக்களுக்கும் வாஞ்சையுடன் உதவி அளித்துள்ளோம். இந்த மனிதாபிமானப் பணிகளில், என்னை நான் முழுமையாக அர்ப்பணித்திருக்கின்றேன். அதேபோன்று,1990ஆம் ஆண்டு துரத்தப்பட்ட முஸ்லிம்களுடன் நானும் ஒருவனாக வெளியேறியவன். பிற்காலத்தில் அந்த மக்களுக்கும் என்னாலான பணிகளை மேற்கொண்டுள்ளேன். அகதி மக்களை மீண்டும் தமது பிரதேசங்களில் குடியேற்றிய போதுதான், வில்பத்துப் புரளியைக் கிளப்பி என்னை ஊடகங்களில் புட்டுப்புட்டு எடுத்தனர். நீதிமன்றத் தீர்ப்பு வெளிவரும்போது, இவர்களின் அபாண்டங்கள் பொய்யென நிரூபணமாகும். சொந்தமண்ணில் மீள்குடியேறிய மக்கள் மீது வீண்பழிகளை சுமத்தியவர்கள், “பொய்யர்கள்” என்று இந்த நாடும் நீதிமன்றங்களும் சொல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், வில்பத்து விவகாரம் மற்றும் என்னைப் பற்றிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்து, உண்மையை வெளிப்படுத்துமாறு நான் கடிதம் மூலம் கேட்டிருந்தேன். அஸ்கிரிய, மல்வத்து மகாநாயக்க தேரர்களையும் நான் விரைவில் சந்தித்து, இந்த விடயத்தையும் கூறி, ஜனாதிபதிக்கு நான் எழுதிய கடிதம் தொடர்பில், உரிய கவனத்தை ஜனாதிபதி செலுத்த வேண்டுமென வலியுறுத்துமாறும் கோரிக்கை விடுக்கவுள்ளேன். “சஹ்ரான்” என்ற அந்த சக்தியின் பின்னால் இருந்தவர்கள் யார்? இயக்கியவர்கள் யார்? என்பதையும் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமென, ஜனாதிபதியிடம் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

முஸ்லிம் சமூகத்துக்கோ, உலமாக்களுக்கோ, முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கோ இந்தப் பயங்கரவாத செயலுடன் துளியளவும் சம்பந்தமில்லை என்பதை, மிகவும் பொறுப்புடன் மீண்டும் கூறுகின்றேன்.

இன்றைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் சிலரின் சாதனைகள் பற்றியும் குறிப்பிட்டேயாக வேண்டும். அதாவது, “எல்லோருக்கும் ஒரே சட்டம்” என்ற அத்துரலியே ரத்தன தேரரின் பிரேரணை, விஜேதாஸ ராஜபக்ஷவின் பாராளுமன்ற வெட்டுப்புள்ளி அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம், இன ஒற்றுமையைக் குலைப்பதற்கு இவர்கள் தீனிபோடுகின்றனர்.

அதேபோன்று, சாய்ந்தமருது மக்கள், குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் குடும்பத்தைக் காட்டிக்கொடுத்து, பயங்கரவாதத்தை கூண்டோடு அழிக்க உதவி செய்தவர்கள், எனவே, அந்த அப்பாவி மக்களை சஹ்ரானுடன் தொடர்புபடுத்த வேண்டாமெனவும் கோரிக்கை விடுப்பதோடு, பிரதேச சபைகள் வழங்குவதென்பது, நாட்டைப் பிரித்துக்கொடுப்பது போன்ற பிரிவினைவாதமாக எண்ணி, பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும், பேச்சுக்களை அளந்து பேசவேண்டுமெனவும் சிறுபான்மை சமூகத்தைப் புண்படுத்த வேண்டாமெனவும் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்றார்.

ஊடகப்பிரிவு –

Related posts

அரச ஊடகப் பேச்சாளர்கள் இருவர் நியமனம்

ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து சேவைகள்

பசில்- ரணில் மீண்டும் சந்திப்பு: மாலை முக்கிய பேச்சு