(UTV|கொழும்பு ) – சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று இன்று (20) முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் பாராளுமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ள தொலைப்பேசி உரையாடல் குரல்பதிவுகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.
இன்றைய தினத்தின் பின்னர் பாராளுமன்றம் எதிர்வரும் மாதம் 03 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படவுள்ள நிலையில் 19 ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்திற்கு அமைய மார்ச் மாதம் 02 ஆம் திகதியின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி பெறுவார்.
அதன்படி, ஜனாதிபதியால் எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படுமாயின், எட்டாவது பாராளுமன்றின் இறுதி அமர்வு இன்றுடன் நிறைவடையக்கூடும்.